தினகரன் கட்சிக்குள் வரக்கூடாது: அமைச்சர்கள்

சென்னை: 'அ.தி.மு.க., கட்சிக்குள் தினகரன் மீண்டும் வரக் கூடாது என்று ஏற்கனவே நாங்கள் எடுத்த நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறோம்' என, நிதி அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் பிற அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அமைச்சர்கள், இன்று பல மணி நேரம் தனியாகவும், பின்னர் முதல்வருடனும் ஆலோசனை நடத்தினர். பின்னர் கூட்டாக அவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

அறிவுரை வழங்கிய முதல்வர்

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜூன், 14ம் தேதி துவங்குகிறது. ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்த திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றுவது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தினோம். அதற்கான அறிவுரையை முதல்வர் வழங்கினார்.

கடந்த ஏப்., 17 ம்தேதி மின் துறை அமைச்சர் தங்கமணியின் வீட்டில், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பல மணி நேரம் ஆலோசனை நடத்தி, தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து விலக்கி வைப்பது என முடிவு எடுத்தோம். அப்போது கட்சியில் இருந்து தினகரன் விலகிக் கொள்கிறேன் என்றார். 

தற்போது சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த பிறகு, மீண்டும் கட்சி பணியில் ஈடுபடுவேன் என்கிறார். நாங்கள் ஏப்., 17ம் தேதி எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம். தினகரன், தான் அளித்த வாக்குறுதியில் உறுதியாக இருக்க வேண்டும். நாங்கள் தினகரனை சார்ந்து இல்லை. எங்கள் பின்னணியில் அவர்கள் இல்லை. தொண்டர்கள் தெளிவாக உள்ளனர். கட்சியின் நிர்வாகிகள் யாரும் தினகரனை சந்திக்க மாட்டார்கள். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

Comments