ரெடியாக இருங்கள்.. போர் வரும்போது பார்த்துக்கொள்வோம்.. ரஜினி பரபரப்பு பேச்சு

Rajinikanth talks openly on his political entryசென்னை: அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். போர் வரட்டும், அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நடிகர் ரஜினி கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15ம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். நிறைவு நாளான இன்று ரசிகர்களுடன் அவர் இறுதி உரையாற்றினார்.
அப்போது, ரஜினிகாந்த் பேசும் போது, எதிர்ப்பு இல்லாமல் அரசியலில் யாரும் வளர முடியாது என்றும் 23 ஆண்டு மட்டுமே தான் கர்நாடகாவில் வாழ்ந்தேன் என்றும் தெரிவித்தார். மீதியுள்ள 44 ஆண்டுகள் தமிழகத்தில வாழ்ந்து வரும் தான் ஒரு "பச்சை தமிழன்" என்று அறிவித்துக் கொண்டார். அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று ஆருடங்கள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இன்றைய ரஜினிகாந்த்தின் பேச்சு தீர்க்கமாக அவர் அரசியலில் குதிக்க உள்ளார் என்பதை காட்டியது. மேலும், அரசியலுக்கு மூலதனமே எதிர்ப்புதான் என்று கூறிய ரஜினிகாந்த், போருக்கு தயாராகுங்கள் என்றும் தன்னுடைய ரசிகர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார். போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ள அவர், ரொம்பவும் தெளிவாக தான் அரசியலில் வந்துவிட்டதை அறிவித்திருக்கிறார். நேற்று அரசியல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டால் கூட "அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள் ப்ளிஸ்"என்று கெஞ்சியவர் இன்று நேரடியாக அரசியல் பேசியுள்ளார். தமிழகத்தில், மு.க. ஸ்டாலின், அன்புமணி, திருமாவளவன், சீமான் ஆகியோர் செயல்பட்டு வந்தாலும் சிஸ்டம் கெட்டுப் போய் இருப்பதாகவும் அதற்கு மாற்றம் தேவை என்றும் கூறினார் ரஜினிகாந்த்.

Comments