யாருடன் கூட்டணி ? ஓ.பி.எஸ்.,டுவிட்டரில் உருட்டுகிறார்

சென்னை: உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு பின் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., கூறியுள்ளார்.ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக பொது செயலராக பதவியேற்ற சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ்., போர்க்கொடி தூக்கினார். இதனால் அதிமுக பிளவுபட்டது. இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியது. 
சசி தரப்பினர் அதிமுக அம்மா அணி என்ற பெயரிலும், ஓ.பி.எஸ்., தரப்பினர் அதிமுக புரட்சி தலைவி அம்மா என்ற பெயரிலும் செயல்பட்டு வருகின்றனர். இரு தரப்பினருக்கு இடையே பேச்சுவார்த்தை துவங்கும் என அதிமுகவினர் எதிர்பார்த்த நிலையில், ஆனால் ஓ.பி.எஸ்., தரப்பினர் விதித்த கோரிக்கை ஏற்கப்படாததால் முட்டுக்கட்டை நிலவுகிறது. 

சில நிமிடங்களில் மாறிய டுவிட்

இந்நிலையில், ஓ.பி.எஸ்., டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு வெளியிடப்படும் என்றார். இதனையடுத்து சில நிமிடங்களில் மற்றொரு டுவிட்டில், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி முடிவு செய்வோம் என்ற அர்த்தத்தில் தான் முதல் செய்தி வெளியிடப்பட்டது எனக்கூறியுள்ளார்.ஓ.பி.எஸ்., நேற்று டில்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். இந்த நேரத்தில் வந்துள்ள டுவிட் தகவல் முக்கியத்துவம் பெறுகிறது.

Comments