தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா? அதிர்ச்சி வைத்தியத்திற்கு ஸ்டாலின் திட்டம்

சென்னை: தமிழக சட்டசபையைக் கூட கூட்ட மறுக்கும் அ.தி.மு.க., அரசை எதிர்த்து, தி.மு.க.,வின் 89 எம்.எல்.ஏ.,க்களையும் ராஜினாமா செய்ய வைக்கும் திட்டம் குறித்து, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தீவிரமாக யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம், லஞ்சம், ஊழல் பெருத்து விட்டது, விவசாயிகள் பிரச்னை தீர்க்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக, தமிழக சட்டசபையைக் கூட்ட வேண்டும் என்று, தி.மு.க., தரப்பில் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்டி விவாதித்த பின், கட்சியின் கொறடா சக்கரபாணி எம்.எல்.ஏ., தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, தமிழக சட்டசபையைக் கூட்ட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

இது தொடர்பாக, சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொன்ன முதல்வர் பழனிச்சாமி, அடுத்த சில மணி நேரத்தில், தனபாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின், கட்சி தலைமை அலுவலகத்தில், அமைச்சர்களை கூட்டி, இது தொடர்பாக விவாதித்தார். அப்போது, தி.மு.க., வலியுறுத்தியெல்லாம், தமிழக சட்டசபையை கூட்ட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. இந்த நேரத்தில் தமிழக சட்டசபையைக் கூட்டினால், பன்னீர்செல்வம் அணியினரோடு சேர்ந்து, தி.மு.க.,வினர் அரசுக்கு நெருக்கடி கொடுப்பர் என்று, நிதித் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதை அடுத்து, சட்டசபையை கூட்டுவதில்லை என்ற முடிவுக்கு பழனிச்சாமி வந்தார். ஆனால், அரசின் முடிவை ஜெயக்குமாரே அறிவிக்கட்டும் என, அவரிடமே பொறுப்பை ஒப்படைத்தார் பழனிச்சாமி.

ஜெயக்குமார் மறுப்பு:

இதையடுத்து, சட்டசபையைக் கூட்ட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்த ஜெயக்குமார், தி.மு.க., ஆட்சி காலத்திலும் இப்படி சட்டசபை கூட்டத் தொடரை கூட்டாமல் இருந்துள்ளனர் எனவும் கூறினார். இதையடுத்து, ஜெயக்குமார் மீது கோபம் அடைந்த ஸ்டாலின், அமைச்சர் ஜெயக்குமார் சூப்பர் டூப்பர் முதல்வராக செயல்படுகிறார் என கோபமாக கூறினார்.இதையடுத்து, தமிழக அரசுக்கு அதிர்ச்சியும்; கடும் நெருக்கடியும் தி.மு.க., தரப்பில் கொடுக்க வேண்டும் என்று, ஸ்டாலினுக்கு தொடர்ந்து ஆலோசனைகள் சொல்லப்பட்டு வருகிறது. இதையடுத்து, தி.மு.க.,வின் 89 எம்.எல்.ஏ.,க்களையும், கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு நடக்கவிருக்கும் சட்டசபை செயல்பாடுகள் தொடர்பான வைர விழா நிகழ்ச்சிக்குப் பின், ராஜினாமா செய்ய வைக்கலாமா என்பது குறித்து, ஸ்டாலின் தீவிர யோசனையில் ஆழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Comments