இரு அணிகளும் மோதல் சசிகலாவையும், தினகரனையும் அதிமுக பதவிகளில் இருந்து நீக்கவில்லை, நிபந்தனைகள் நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தை என்று ஓபிஎஸ் அணியினர் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் இரு அணியின் நிர்வாகிகளும் மாறி மாறி பேசியதால் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் அதிமுகவின் அணிகள் இணையாது என்று நினைத்திருந்த வேளையில், அமைச்சர் ஜெயகுமார் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் அணியினரை அழைத்து வருகிறார்.
விமான நிலையத்தில் பேட்டி டெல்லியில் ஜிஎஸ்டி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு சென்னை திரும்பிய அமைச்சர் ஜெயகுமார் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அதிமுகவில் இரு அணிகள் இணைப்பு விவகாரத்தில், நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம். அவர்கள் நாளைக்கே பேச வந்தாலும், நாங்கள் தயார்.
காத்திருக்க முடியாது ஓபிஎஸ் அணியின் இரு நிபந்தனைகளில் ஒன்றான ஜெயலலிதா மரணம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அந்த தீர்ப்பு வரும் வரை எங்களால் காத்திருக்க முடியாது. மேலும் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அதற்கு முன்னால் எதுவும் செய்யமுடியாது.
அவரவர் விருப்பம் சசிகலா, தினகரன் ஆகியோர் ஆட்சியிலோ, அதிகாரத்திலோ, கட்சியிலோ தலையிடவில்லை. அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். அதையும் மீறி, அவர்கள் ஆட்சியில் தலையிடுகிறார்கள், அதிகாரத்தில் தலையிடுகிறார்கள் என்று கூறுவார்களேயானால், அதை கவனிக்கத் தயாராக உள்ளோம். சசிகலாவையும், தினகரனையும் சிறையில் சென்று சந்திப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அவ்வாறு சந்திப்பவர்களை நாங்கள் எதுவும் கேட்கவும் முடியாது என்றார்.
Comments