
திருவனந்தபுரம்: மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள புதிய அறிவிக்கையில், 1960ம் ஆண்டு, மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனிமேல், மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய முடியாது. மத்திய அரசின் இந்த விதிமுறையை கேரள அமைச்சர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். கேரளாவில் மாட்டிறைச்சி என்பது அவர்கள் தினசரி உணவு வழக்கத்தோடு கலந்தது என்பது அம்மாநிலத்தின் கடும் எதிர்ப்புக்கு ஒரு காரணமாகும். மேலும், தங்கள் உணவு உரிமையில் பிறர் தலையிடுவதா என்ற தற்சார்பு உணர்வும், அங்கு கோபத்தை அதிகரித்துள்ளது.
உள்ளாட்சி மற்றும் சிறுபான்மை விவகார துறை அமைச்சர் கே.டி.ஜலீல் கூறுகையில், மத்திய அரசின் புதிய விதிமுறையை ஏற்க முடியாது என்றார். வனத்துறை அமைச்சர் கே.ராஜு கூறுகையில், இந்த விதிமுறை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றார். விவசாயத்துறை அமைச்சர் சுனில்குமார் கூறுகையில் மத்திய அரசின் உத்தரவு முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது. இதை ஏற்கவே முடியாது என்றார். அதேநேரம், தமிழக அரசு இதுகுறித்து எதிர்ப்பு எதையும் தெரிவிக்கவில்லை. நீட் உள்ளிட்ட விவகாரங்களில் எப்படி வலுவற்ற செயல்பாட்டை முன் வைத்ததோ அதே நிலைப்பாட்டை தொடருகிறது தமிழக அரசு.
Comments