இந்தியா மீது பாக்., பொய் குற்றச்சாட்டு: ஐ.நா., நிராகரிப்பு

ஐக்கிய நாடுகள் : ஐ.ந., கண்காணிப்பாளர்கள் சென்ற வாகனத்தை குறி வைத்து இந்திய ராணுவம் தாக்கியதாக பாகிஸ்தான் கூறிய குற்றச்சாட்டை நிராகரித்துள்ள ஐ.நா., இதற்கு ஆதாரம் ஏதுமில்லை எனக்கூறியுள்ளது.ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சர்வதேச எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் ஐ.நா.,வின் கண்காணிப்பாளர்கள் பிலிப்பைன்சின் மேஜர் இமானுவேல் மற்றும் குரோஷியாவின் மேஜர் மிர்கோ ஆகியோர் சென்ற வாகனத்தை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் குற்றம்சாட்டியது.

இது தொடர்பாக ஐ.நா., பொது செயலரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபனே டுஜாரிக் கூறியதாவது: இந்தியா - பாகிஸ்தானுக்கான ஐ.நா., கண்காணிப்பாளர்கள் வாகனத்தில் சென்ற போது, துப்பாக்கிச்சூடு சத்தத்தை கேட்டனர். ஆனால் அவர்கள் சென்ற வாகனம் குறி வைத்து தாக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை. இதில் ஐ.நா., பார்வையாளர்கள் யாரும் காயமடையவில்லை. காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை கவலையளிக்கிறது. அங்கு நிலவும் சூழ்நிலையை பொது செயலர் தீவிரமாக கண்காணித்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Comments