அதிமுக.,வுக்கு கட்டப் பஞ்சாயத்து செய்யும் மோடி : ஸ்டாலின்

சென்னை : சென்னை பள்ளிகரணையில் திமுக சார்பில் குளம் தூர்வாரும் பணியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று (மே 25) பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

அப்போது பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் திமுக சார்பில் குளங்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. குளங்கள் தூர்வாரப்படுவதற்கு அந்தந்த பகுதி மக்கள் ஆதரவும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர். மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை குறைப்பதற்காகவே தூர்வாரும் பணியை செய்து வருகிறோம். ஆனால் திமுக.,விற்கு புகழ் வந்துவிட கூடாது என்ற நோக்கில் சில அரசியல் கட்சிகள் இதனை விமர்சித்து வருகின்றன.

முதல்வர் பழனிசாமி, பிரதமர் இடையேயான சந்திப்பு அரசியல் ரீதியிலானது தான். அதிமுக.,வை இரண்டாக உடைப்பதற்கும், உடைந்திருக்கும் அதிமுக.,வை ஒன்றாக இணைப்பதற்கு கட்டப் பஞ்சாயத்து செய்வது போல் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். சட்டசபையில் ஜெயலலிதாவின் படம் திறப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு அது பற்றி கருத்து கூறுகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

Comments