அமைச்சரவையில் மாற்றம் கிடையாது: முதல்வர் பழனிசாமி

ஏற்காடு: தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏதுமிருக்காது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

போர்க்கொடி:

கடந்த சில நாட்களாக எம்.எல்.ஏ.,க்கள் சிலர் அணி அணியாக கூடி ஆலோசனை நடத்தினர். தலித் எம்.எல்.ஏ.,க்கள் தனியாக கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது அவர்கள் தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் எனக்கூறினர். இதேபோல், சில சமுதாயத்தினரும் அமைச்சர் பதவி கேட்டு முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்தனர்.

நிராகரிப்பு:

இந்நிலையில், இந்த கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி அளிக்கும் வகையில் ஏற்காடு கோடை விழாவை துவக்கி வைத்து முதல்வர் பழனிசாமி கூறியதாவது: தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏதும் இருக்காது. எம்.எல்.ஏ.,க்களிடம் ஜாதி பாகுபாடு காட்டும் எண்ணம் ஏதும் இல்லை. அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தொகுதி பிரச்னை குறித்து கோரிக்கை மனு அளிக்கவே எம்.எல்.ஏ.,க்கள் என்னை சந்தித்தனர். சட்டசபையில் ஜெயலலிதா படத்தை வைக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், மெரினாவில் அவரது நினைவிடத்திற்கு சென்று மக்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments