ஆமதாபாத்: குஜராத்தில் பசுக்கள் சட்ட விரோதமாக கடத்தி கொல்லப்படுவதை தடுக்க, அங்கு பசுக்களின் காதில் சிப்கள் பொருத்தப்படுகின்றன.
சட்டம்:
கடந்த சில மாதங்களுக்கு முன் சட்ட விரோதமாக பசுக்களை கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது. இதனையடுத்து பசுக்கள் கடத்தலை தடுக்க மின்னணு முறையில் கண்காணிக்க முடிவு செய்த மாநில அரசு, அதன் காதில் ரேடியோ அலைவரிசையில் இயங்கும் சிறிய சிப்பை பொருத்த முடிவு செய்தது. இதன் மூலம் பசுக்களின் உடல்நிலையையும் கண்காணிக்க முடியும்.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாநிலத்தில் சுமார் 6 லட்சம் கால்நடைகள் உள்ளன. முதல்கட்டமாக 37 ஆயிரம் பசுக்களுக்கு ஒருங்கிணைந்த அடையாள எண் வழங்கப்படும். இதற்காக காந்திநகரில் தனி மையம் அமைக்கப்பட்டு அனைத்து தகவல்களும் அங்கு சேகரிக்கப்படும். நிபுணர்கள் குழு, 200க்கும் மேற்பட்ட குழுக்கள் மாநிலத்தின் பல பகுதிக்கு சென்று, பசுக்களின் காதுகளில் சிறிய சிப்களை பொருத்தி வருகிறது. இதன்மூலம் பசுக்கள் பற்றிய டிஜிட்டல் தகவல் உருவாக்கப்பட்டு சேகரித்து வைக்கப்படும். இந்த சிப்பில், பசுக்களின் வகை, நிறம், பெயர், பிறந்த தேதி,, கொம்புகளின் வடிவம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இதற்காக அரசு முதல்கட்டமாக 2.8 கோடி ஒதுக்கப்பட்டு, கிர், கன்க்ரேஜ், தங்கி வகை மாடுகள் தகவல்கள் சேகரிக்கப்படும். இந்த தகவல்கள் அனைத்தும் மத்திய தகவல் மையத்தில் சேகரிக்கும் திட்டம் உள்ளது. பசுக்களின் நடமாட்டத்தை ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Comments