சென்னை அண்ணா சாலையில் திடீர் பள்ளத்தில் சிக்கிய பஸ்,கார்

சென்னை: சென்னை அண்ணா சாலை ஜெமினி பாலம் அருகே சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்ட பள்ளத்தில், அண்ணா சதுக்கத்திலிருந்து வடபழனி சென்ற சென்னை மாநகர பஸ்சும், காரும் சிக்கிக்கொண்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சிலர் காயமுற்றதாக தெரிகிறது. சம்பவ இடத்தில் மீட்பு படையினர் குவிந்துள்ளனர். 2 மணி நேரத்தில் பஸ், கார் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது. 

மெட்ரோ திட்ட பணியின் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் அண்ணாசாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளம் உடனடியாக மூடப்பட்டது. தற்போது இந்த இடத்திற்கு அருகே மீண்டும் புதிய பள்ளம் உருவாகி, அந்த பள்ளத்தில் பஸ்சும், காரும் கவிழ்ந்தது.

போக்குவரத்து பாதிப்பு:

பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்சில் இருந்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதில் 10 பேர் வரை காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. விபத்திற்குள்ளான பஸ்சில் 25 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் பணிகள் காரமாகவே இந்த பள்ளம் ஏற்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார், மேலும் நாளைக்குள் சீர் செய்து இந்த ரோட்டில் போக்குவரத்து சீர் செய்யப்படும் என்றார்.

Comments