'வறட்சி, தண்ணீர் இல்லாத தால் பயிர்களை காப்பாற்ற முடியாமல், தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும், கடன்களை ரத்து செய்யக் கோரியும், தமிழக விவசாயிகள், டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த பிரச்னையில் நடவடிக்கை எடுக்க உத்தர விட வேண்டும்' என, தமிழ்நாடு பொதுநல வழக்கு மையம் சார்பில்,சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடன் தொல்லை :
இந்த வழக்கு, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை யிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அமர்வு கூறியதாவது: பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை பாது காக்க வேண்டியது, மாநிலத்தின் கடமை. ஆனால், வறட்சியாலும், கடன் தொல்லையாலும் பாதிக்கப் பட்டு, உயிருக்கு போராடும் நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு மாதத்துக்கு மேலாக டில்லியில் போராடி வருகின்றனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஒரு விரலை கூட நீட்டுவதற்கு தமிழக அரசு முயற்சி மேற்கொள்ளாதது அதிர்ச்சி அளிக்கிறது. எப்போதும், மத்திய அரசின் உதவியை மட்டுமே எதிர்பார்க்காமல், மற்றவர்களை குறை கூறாமல், வறட்சி மற்றும் கடன்களால் பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு, மனிதாபிமானத்துடன் உதவிட தமிழக அரசு உடனே முன்வர வேண்டும்.
வேதனை :
இவ்வளவு பிரச்னைகள் நடந்தபோதும், விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போதும், தமிழக அரசு எதுவுமே நடக்காதது போல், மவுனமாக இருப்பது ஆச்சரியமாகவும், வேதனையாகவும் உள்ளது. பிரச்னைகளில் இருந்து மீட்டெடுக்க, விவசாயிகளுக்கு இதுவரை என்னென்ன செய்யப் பட்டது என்பது குறித்து, மே, 2ம் தேதி அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.
இந்த வழக்கில், கோர்ட்டுக்கு உதவுவதற்காக, 'அமிகஸ் கியூரியாக' நியமிக்கப்பட்டுள்ள, மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியன், 'இந்தப் பிரச்னை மஹாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களிலும் உள்ளது' என்றார். அதனால் கோபமடைந்த அமர்வு, 'பிரச்னையை நீர்த்து போகும்படி செய்ய வேண்டாம்.
தமிழக விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து மட்டும் தனியாக விசாரிக்க உள்ளோம். இது நுாற்றில் ஒரு வழக்கு அல்ல; மனிதாபி மானத்துடன் விசாரிக்க வேண்டிய வழக்கு' என, உறுதியுடன் தெரிவித்தது.
Comments