சொல்லி கொடுத்தபடி...:
தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டில்லி போலீசார் விசாரணையில் இருந்து தப்பிக்க, சசிகலாவை சந்திக்க பெங்களூருவுக்கு செல்வதாக கூறி, சென்னையில் இருந்து, 'எஸ்கேப்' ஆன, தினகரன் நேற்று நள்ளிரவே சென்னைக்கு திரும்பினார். அதற்கு முன், அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து, இன்று காலை சென்னை அடையாற்றில் உள்ள தன் வீட்டில் தன் ஆதரவு அமைச்சர்களுடன் தினகரன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அவரை சந்திக்க, எம்.எல்.ஏ., வெற்றிவேலும் வந்து இருந்தார். அதன் பிறகு, தினகரன் சொல்லி கொடுத்தபடி, வெற்றிவேல் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரனின் அனுமதியின்றி அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. அமைச்சர்கள் ஒன்றாக இணைந்து எப்படி கட்சி விவகாரம் பற்றி பேச முடியும். அமைச்சர்கள் கூட்டம் அதிகாரப்பூர்வமானது இல்லை. போயஸ் கார்டன், கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்கும் கூட்டம் தான் அதிகாரப்பூர்வமானது. அமைச்சரவை கூட்டம் வேண்டுமானாலும் நடத்தியிருக்கலாம். அமைச்சர்கள் சந்திக்கக்கூடாது என சட்டம் ஏதுமில்லை. சசிகலா அணியை சேர்ந்தவர்கள், யாரிடமும் மண்டியிட மாட்டோம்.
முருங்கை மரத்தில் வேதாளம்:
தவறுகளை மறைக்க நான்கு பேர் மட்டுமே மண்டியிட்டு கொண்டிருக்கின்றனர். இன்று நிபந்தனை விதிப்பவர்கள் யார் யார் காலில் விழுந்துள்ளனர் என்பதை பார்த்துள்ளேன். ஓ.பி.எஸ்., அணியுடன் பேச, குழு அமைக்கப்படவில்லை.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக ஓபிஎஸ் மீண்டும் கூறுகிறார். வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது.அமைச்சர் பதவியில் இருப்பதனால் யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் பேச வேண்டும் என்பதில்லை. பொது செயலாளராக சசிகலாவும், துணை பொது செயலாளராகவும் தினகரன் தொடர வேண்டும். தினகரனுக்கு கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும். அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டம் கூட்ட வேண்டிய சூழ்நிலை தற்போது இல்லை.அணிகள் இடையே கருத்து வேறுபாடு இருக்கும். சண்டை இருக்காது. முதல்வர் மற்றும் நெடுஞ்சாலை, உள்துறை உள்ளிட்ட 6 துறைகளை பதவிகளை கொடுத்தால் மீண்டும் இணைய தயார் என ஓ.பி.எஸ்., கூறுகிறார். தம்பிதுரை பற்றி பேச ஒரு நாள் போதாது. இவ்வாறு வெற்றிவேல் கூறினார்.
Comments