ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக தினகரன் தரப்பு, வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் கொடுத்ததாக புகார்கள் குவிந்தன. இதன் காரணமாக தேர்தல் கமிஷன் இடைத்தேர்தலையே ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனையும் நடத்தப்பட்டது. இந்நிலையில் இரட்டை சின்னத்தை கைப்பற்றுவதற்காக தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டில்லியில் 2 பேர் பணத்துடன் பிடிப்பிட்டுள்ளனர்.
டில்லியில் உள்ள ஓட்டல் ஒன்றில் இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவது தொடர்பான பேரம் நடந்துள்ளது. ரூ.60 கோடி வரை தினகரன் தரப்பில் பேரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஓட்டலில் போலீசார் நடத்திய சோதனையின் போது சந்திரசேகர் மற்றும் இடைத்தரகர் சுகேஷ் சந்திரா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இடைத்தரகர் சுகேஷ் சந்திரா பெங்களூருவை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து பெரிய அளவிலான ரொக்க பணம் 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவதற்காக தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மற்றும் கைது செய்யப்பட்ட 2 பேர் அளித்த வாக்குமூல விபரங்களை அறிக்கையாக டில்லி லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார், தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் தினகரனுக்கு சம்மன் அனுப்பி விசாரணையை துவக்கவும் டில்லி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றது உறுதி செய்யப்பட்டாலோ அல்லது தினகரன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தாலோ தினகரன் மீதான கைது நடவடிக்கை உடனடியாக துவக்கப்பட உள்ளது.
Comments