இதனால், பணத்தை வாரி இறைத்த, அ.தி.மு.க., அம்மா அணி வேட்பாளர், தினகரன் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி, எம்.எல்.ஏ., வாக இருந்த ஜெயலலிதா காலமானதை அடுத்து, இத்தொகுதிக்கு, ஏப்., 12ல் இடைத் தேர்தல் நடத்தப்படும் என, தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது.
தேர்தலில், அ.தி.மு.க., அம்மா அணி சார்பில், அக்கட்சியின் துணை பொதுச் செயலராக அறிவிக்கப்பட்டுள்ள தினகரனும், அ.தி.மு.க., புரட்சி தலைவி அம்மா அணி சார்பில், முன் னாள் அமைச்சர் மதுசூதனனும் வேட்பாளர் களாக களம் இறங்கினர். தி.மு.க., சார்பில், மருதுகணேஷ் உட்பட, மொத்தம், 62 பேர் களமிறங்கினர்.
எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதற்காக, தினகரன் பணத்தை வாரி இறைத்து வந்தார். தேர்தல் கமிஷன் கெடுபிடி களை மீறி, ஓட்டுக்கு, 4,000 ரூபாய் பணத்தை, தன் ஆதரவாளர்கள் மூலம், வாக் காளர்களுக்கு வழங்கிய, 'வீடியோ' காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவின.
இதையடுத்தும், மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும், இரு தினங்களுக்கு முன், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. குறிப்பாக, ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர் களுக்கு, ஓட்டுக்கு, 4,000 ரூபாய் வழங்கியது தொடர்பான ஆவணங்களும் கிடைத்தன.
இந்த ஆவணங்கள், நேற்று முன்தினம் வெளியாகின. அதில், அ.தி.மு.க., அம்மா அணி, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களான, முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் மற்றும் வைத்தி லிங்கம் எம்.பி., மூலம், 85 சதவீத வாக்காளர் களுக்கு, 89.65 கோடி ரூபாய் வினியோகம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த அமைச்சர்கள், ஜூனியர் அமைச்சர்கள் மற்றும், எம்.எல்.ஏ.,க்கள் மூலம், பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங் களும் சிக்கி உள்ளன. ஒவ்வொரு வரும், எவ்வளவு வாக்காளர்களுக்கு, எவ்வளவு பணம் கொடுத்தனர் என்ற விபரமும் இடம் பெற்று இருந்தது.
இதையடுத்து, மாநில தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சிறப்பு தனி தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா ஆகியோர் டில்லிக்கு விரைந்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் வழங்கியது குறித்து, தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில், நேற்று நடந்த ஆலோசனையில் இவர்கள் பங்கேற்றனர்.
நேற்று காலை துவங்கி, இரவு வரை நடந்த நீண்ட ஆலோசனைக்கு பின், தேர்தலை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்றிரவு, 11:30க்கு வெளியானது.
Comments