அதில், சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், கட்சியின் சார்பில் போட்டியிடும் தினகரன் வெற்றிக்காக ஒவ்வொரு அமைச்சரும் செலவிட வேண்டிய தொகை மற்றும் கவர் செய்ய வேண்டிய வாக்காளர்கள் பட்டியலை, வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். அந்தப் பட்டியல் வெளியாகி, அரசியல் வட்டாரங்களில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த பட்டியலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி என, அமைச்சர்கள் பலரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன. என்னதான், தேர்தல் செலவுக்கான விவரப் பட்டியல் என்றாலும், தேர்தல் நேரத்தில் அந்தப் பட்டியலை, வருமான வரித் துறையினர் கைப்பற்றும் விதமாக, அதை பத்திரப்படுத்தாமல் வைத்திருந்தது ஏன் என்ற கேள்வி, அ.தி.மு.க., வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
ஆர்.கே.நகர் தேர்தலில், தினகரன் போட்டியிடுவது, அ.தி.மு.க.,வின் முக்கியத் தலைவர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை. குறிப்பாக, தினகரன் வெற்றி பெற்றால், அவர், எடப்பாடி பழனிச்சாமியை கீழிறக்கி விட்டு, அவர் வகிக்கும் முதல்வர் பதவியில் தினகரன் உட்காருவதை தடுக்க முடியாது. அதனால், தினகரன், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், வெற்றி பெறக் கூடாது என்று, அ.தி.மு.க., அமைச்சரகள் பலரும் விரும்புகின்றனர்.
அதனால், சிலர் திட்டமிட்டே, இப்படிப்பட்ட பட்டியலை அலட்சியமாக வைத்திருந்ததாக, தினகரன் தரப்பு முதல்வர், அமைச்சர்கள் என பலர் மீதும் சந்தேகப்படுகின்றனர். இந்தப் பட்டியலை வைத்துத்தான் தற்போது, தேர்தலை நிறுத்துவது குறித்து, தேர்தல் கமிஷன் யோசித்து வருவதால், தினகரன், கடும் கோபம் அடைந்திருப்பதாக தெரிகிறது.
ஒருவேளை, ஆர்.கே.நகரில் தேர்தல் நிறுத்தப்பட்டால், அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்த தினகரன் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாற்றத்தில், விஜயபாஸ்கருக்கு மீண்டும் வாய்ப்பில்லாமல் போகலாம்.இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
Comments