செல்லாது:
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பத்திரிகையாளர்களுக்கு பன்னீர்செல்வம் அளித்த பேட்டி:ஜெ., நினைவிடத்தில் எனது நிலைப்பாட்டை ஏற்கனவே தெரிவித்துள்ளேன். குடும்ப ஆட்சிக்கு ஜெ., மற்றும் எம்ஜிஆர் எதிர்ப்பு தெரிவித்தனர். எந்த குடும்பத்திடமும் அதிமுக செல்லக்கூடாது என ஜெ., உறுதியாக இருந்தார். அரசியலில் ஈடுபட மாட்டேன் என சசிகலா கூறியிருந்தார். அவரை உதவியாளராக மட்டுமே சேர்த்து கொண்டார். வேறு யாரையும் சேர்க்கவில்லை. ஒரு குடும்பத்தின் கையில் கட்சி சென்றுவிடக்கூடாது. ஜெ.,மரணத்தில் உள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டும். பொது செயலாளரை தொண்டர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என்பது விதி. அதிமுகவில் நியமனம் என்பது விதியில் இல்லை. சசி பொது செயலராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது. அவர் நியமனம், நீக்கம் உள்ளிட்ட எந்த நியமனங்களும் செல்லாது.
அவப்பெயர்:
ஆர்கே நகரில் ஓட்டுக்கு ரூ. 4 ஆயிரம் கொடுத்ததுடன் பல முறைகேடுகளையும் செய்தனர். வருமான வரித்துறை பல்வேறு சோதனைகளை நடத்தி விஜயபாஸ்கர் மற்றும் பலரது வீட்டில் பல கோடி ரூபாய் மற்றும் ஆவணங்களை கைப்பற்றியது மீடியாக்களில் செய்தி வந்துள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை வர உள்ள நிலையில், தீர்ப்பை தங்களுக்கு சாதகமாக பெற பணம் கொடுத்து முயற்சி செய்தனர். இதன் மூலம் தவறுக்கு மேல் தவறு செய்து அதிமுகவுக்கும், தமிழகத்திற்கும் அவப்பெயர் உருவாக்கியுள்ளனர்.
நிலைப்பாடு:
எங்கள் அடிப்படை கொள்கையிலிருந்து மாற்றமில்லை. ஒரு குடும்பத்தின் பிடியில் ஆட்சி, கட்சி இருப்பதை ஏற்க முடியாது. எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த போது, தனது சகோதரரை தீவிர அரசியலில் ஈடுபடுத்தவில்லை. ஜெ.,வும் இந்த கொள்கையை தான் கடைபிடித்தார்.
நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை என்ற தகவல் தவறானது. சசி குடும்பம் இருக்கும் வரை பேச்சு வார்த்தை கிடையாது. சசி குடும்பம் அதிமுகவில் இருக்கக்கூடாது என்பது தான் எங்களது நிலைப்பாடு. ஜெ., மரணத்தில் நீதி விசாரணை வரும் வரை ஓயப்போவதில்லை. அவரது மரணத்தில் இருக்கும் மர்மம் விலகும் வரை தர்மயுத்தம் தொடரும் . சமரசம் செய்ய குழு வந்தால் வரவேற்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், பழனிசாமியை முதல்வாக ஏற்பீர்களா என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு நடக்காததை பற்றி ஏன் பேச வேண்டும் என்றார்.
Comments