மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தாய் சந்தியாவும் சேர்ந்து வாங்கிய வீடு தான், சென்னை, போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம். சந்தியா மறைவுக்கு பின், அந்த வீடு, ஜெ., பெயரில் உள்ளது. ஜெ., இறந்த பின், சசிகலா தன் குடும்ப உறுப்பினர்களுடன், போயஸ் கார்டன் வீட்டில் வசித்து வந்தார். பின், சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு உள்ளார்.
வாரிசுகள்
ஜெ., வீட்டை நினைவு இல்லமாக மாற்றி, மக்களின் பார்வைக்கு விட வேண்டும் என, பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வீடு, ஜெயலலிதாவின் ரத்த உறவு வாரிசுகளுக்கு மாற்றப்பட்டுள்ளதா அல்லது சசிகலா குடும்பத்தினரின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதா என்ற சர்ச்சைக்குரிய கேள்விகளும், மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
போயஸ் கார்டன் வீடு அமைந்துள்ள நிலம், ஜெ., தாயார் சந்தியா வாங்கியதால், அந்த சொத்து, சட்டரீதியாக பாட்டி வழி முறையில் பேரன், பேத்திக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.அதன்படி, ஜெ., அண்ணன் மகள் தீபா, தீபக் ஆகியோர், போயஸ் கார்டன் வீடு தங்களுக்கு சொந்தம் என, உரிமை கொண்டாடி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும். ஆனால், அவர்கள் அது போன்ற நிலைப்பாட்டை ஏன் எடுக்கவில்லை என்ற கேள்விக்கும், விடை தெரியாமல் உள்ளது.
சசிகலா சிறை செல்லும் முன், போயஸ் கார்டன் வீட்டுக்கு, தீபக் மட்டும் வந்து சென்றார். அவருக்கு, அங்கு ஒரு அறை ஒதுக்கி தரப்பட்டிருந்தது. இப்போது, அந்த அறையும் பூட்டப்பட்டு விட்டது.அந்த வீட்டில் சசிகலா, இளவரசி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் தங்கியிருந்த போது, வீட்டின் சமையல் அறையின் அடுப்பு அணையாமல் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும். அந்தளவுக்கு தடபுடல் சமையல் நடக்கும். சசிகலா சிறைக்கு சென்றதால், அவரின் குடும்ப உறுப்பினர்கள் யாரும், அங்கு வருவதில்லை.
பூஜை அறை
அதனால், தற்போது, சமையலறை பூட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதா, சசிகலா படுக்கை அறைகள், ஜெயலலிதாவின் பூஜை அறை உள்ளிட்ட முக்கிய அறைகளை மட்டும், அவ்வப்போது, ஊழியர்கள் சுத்தம் செய்து பராமரித்து வருகின்றனர். ஜெ., உதவியாளர்கள் பூங்குன்றன், கார்த்திக் உட்பட, 20 ஊழியர்கள் மட்டும், தினமும் வந்து, தங்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 'சசிகலா இருந்த வரை, அவரை சந்திக்க, நான் அங்கு சென்றேன்; இனிமேல், நான் அங்கு செல்ல வாய்ப்பில்லை; மற்றவர்களும் செல்ல வேண்டாம்.
'எங்களுக்கு, பெசன்ட் நகரில் வீடு இருக்கிறது; சந்திக்க அங்கு வாருங்கள்; இல்லையெனில், கட்சி அலுவலகம் வாருங்கள். போயஸ் கார்டன் வீட்டுக்கு, யாரும் செல்ல வேண்டாம்' என, தனக்கு நெருக்கமானவர்களிடம், தினகரன் உத்தரவு பிறப்பித்து உள்ளார். போயஸ் கார்டன் வீடு, சட்டரீதியாக யாருக்கு சொந்தம் என்பது இன்னும் மர்மமாக இருக்கிறது. அதே போல், தினகரன் உள்ளிட்ட யாரும், அங்கு தங்க மறுப்பது ஏன் என்பதும் மர்மமாகவே இருக்கிறது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, பரோலில் வரும் நாளில் தான், ஜெ., வீட்டு சமையல் அறை திறக்க வாய்ப்புள்ளது என்கின்றனர், போயஸ் தோட்ட ஊழியர்கள்.
Comments