தொடர் புகார்:
கூடவே, அ.தி.மு.க., புரட்சித் தலைவி கட்சிக்கு வழங்கப்பட்ட இரட்டை மின் கம்பம் சின்னத்தை, இரட்டை இலை போல உருவகப்படுத்தி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு, மக்களை ஏமாற்றி, அவர்கள் ஓட்டுக்களை பெற முயல்கின்றனர் என, டில்லி, தலைமை தேர்தல் ஆணையத்தில், தினகரன் சார்பில், தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியான தளவாய் சுந்தரம் புகார் அளித்தார்.அந்த புகாரை அடுத்து, வரும் 3ம் தேதி காலை 9 மணிக்குள் அ.தி.மு.க., புரட்சித் தலைவி அம்மா கட்சியினர் பதில் அளிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக, அ.தி.மு.க., புரட்சித் தலைவி அம்மா கட்சியின் சார்பில், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது:எங்கள் தரப்பு வேட்பாளர் மதுசூதனனுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. அது, தினகரன் தரப்பு ஆட்களுக்கு வயிற்றை கலக்கிக் கொண்டிருக்கிறது. தோல்வி உறுதி என்ற நிலையில், எப்படியாவது எங்களை முடக்க வேண்டும் என்று பார்க்கின்றனர். தொடர்ந்து, தொகுதிக்குள் எங்கள் தரப்பு ஆட்களிடம் பிரச்னை செய்து கொண்டிருக்கின்றனர்.பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற்று விடலாம் என்று கணக்குப் போட்டு செயல்படுகின்றனர். ஆனாலும், பணத்தால் இம்முறை தொகுதியில் சாதிக்க முடியாது என்று தெரிந்ததும், சின்னத்தை வைத்து பிரச்னை ஏற்படுத்தலாம் என நினைக்கின்றனர். நாங்கள் மின் விளக்கு சின்னத்தை வைத்துத்தான் ஓட்டுக் கேட்டு வருகிறோம். ஆனால், நாங்கள் இரட்டை இலையை உருவகப்படுத்தி, ஓட்டு கேட்டு பிரசாரம் செய்வது போல, புகார் அளித்துள்ளனர்.
உரிய விளக்கம்:
தேர்தல் நேரத்தில் இப்படிப்பட்ட புகார்களெல்லாம் கொடுப்பது வாடிக்கைதான் என்றாலும், தினகரன் தரப்பினர் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று புரியாமல், பலவற்றையும் செய்து வருகின்றனர். இந்த புகார்களுக்கு தேர்தல் கமிஷனில் எங்கள் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படும். இப்படியெல்லாம் குறுக்கு வழியில் யோசித்து, எங்களை முடக்கப் பார்ப்பதை விட்டு விட்டு, நேர் வழியில் பிரசாரம் செய்தாலாவது, கூட நான்கு ஓட்டுக்களை தினகரன் பெறலாம். இதையெல்லாம் அவர் செய்யப் போவதும் இல்லை; ஜெயிக்கப் போவதும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
Comments