அதிமுக ஓபிஎஸ் மற்றும் சசிகலா அணிகள் என இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் சசிகலா அணியின் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்ததால் முதல்வராக பதவியேற்றுள்ளார்.
இதையடுத்து அதிமுகவின் பொதுச் செயலாளராக உள்ள சசிகலா தலைமையை ஏற்க மறுத்து பலர் முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்று அறிவித்த பிறகு ஓபிஎஸ்ஸு மேலும் ஆதரவு அதிகரித்து வருகிறது. மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜூம் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். தொடர்ந்து ஓ.பி.எஸ். ஆதரவு நிகழ்ச்சிகளிலும் நட்ராஜ் கலந்து கொண்டு வந்தார்.
இதனிடையே சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் கலந்து கொண்ட விழாவில் ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நட்ராஜ் கலந்து கொண்டார். இதன் பின்னர் எடப்பாடி அணிக்கு நட்ராஜ் மாறியதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற விழாவில் கலந்துகொண்டது பற்றி எம்.எல்.ஏ நட்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். அரசு விழாக்களில் கலந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கலந்துகொண்டேன். தமிழக மக்களுக்கு திட்டங்களை அர்பணிக்கும் விழாவில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன்.
மயிலாப்பூர் தொகுதி சார்ந்த திட்டங்களும் தொடங்கப்பட்டதால் முதல்வர் பங்கேற்ற விழாவில் பங்கேற்றேன் என்று கூறியுள்ளார். விழாவில் பங்கேற்றதால் தாம் எடப்பாடி அணிக்கு மாறியதாக வெளியான தகவலுக்கு நட்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தவர்களில் நட்ராஜும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments