தினகரனின் தில்லாலங்கடி வேலை அம்பலம் - ஆர்.கே.நகரில் அதிகம்பேர் மனுதாக்கல் செய்ததன் பின்னணி

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், ஓட்டுச் சாவடிகளை கைப்பற்றி, கள்ள ஓட்டுகள் போட தினகரன் தரப்பு சூழ்ச்சி செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 
இதன் காரணமாகவே, அதிக சுயேச்சைகள் களமிறங்கி, 127 வேட்பு மனுக்கள் தாக்கலானதாக கூறப்படுகிறது. அத்துடன், வாக்காளர்களுக்கு விதவிதமான முறையில், பணம் கொடுக்கும் வேலைகளிலும், அவரின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் கோவிலுக்குள், பெண்களுக்கு பணம் கொடுக்க முற்பட்ட போது, தி.மு.க., வினர் முற்றுகையிட்டதால், அமைச்சர்கள் ஓட்டம் பிடித்தனர்.

முதல்வராக இருந்த ஜெயலலிதா, டிசம்பர், 5ல் மறைந்ததை அடுத்து, அவர் தேர்வான, ஆர்.கே.நகர் தொகுதியில், அடுத்த மாதம்,12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட, அ.தி.மு.க., அம்மா அணி சார்பில், தினகரன்; அ.தி.மு.க., புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில், முன்னாள் அமைச்சர் மதுசூதனன்; தி.மு.க., சார்பில், மருது கணேஷ்; பா.ஜ., சார்பில், கங்கை அமரன்; ஜெ., அண்ணன் மகள் தீபா உட்பட, 127 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

தள்ளுபடி

மனுக்கள் பரிசீலனையின் போது, 70 பேர் சார்பில் தாக்கலான, 82 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன; மற்றவை தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள். இன்று மாலை, 5:00 மணிக்கு, இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். இந்த பட்டியலின் படி, வேட்பாளரின் பெயரும், அவரது சின்னமும் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்படும்.

ஒரு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், 16 வேட்பாளர்களின் புகைப்படங்கள் மற்றும் சின்னங்கள் மட்டுமே இடம் பெற முடியும். இதன் படி பார்த்தால், ஒரு தொகுதியில், நான்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் இடம் பெறக் கூடிய அளவான,64வேட்பாளர்களில், 63 பேர் களத்தில் இருந்தால் மட்டுமே, ஓட்டுப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்த முடியும். ஏனெனில், 64ல் ஒரு சின்னமாக, 'நோட்டா' இடம் பெறும். 

ஏழு பேர்

அதனால், தற்போதுள்ள, 70 பேரில், ஏழுபேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில், ஓட்டுச்சீட்டு முறையில் தான் தேர்தல் நடத்தப்படும். நேற்றைய நிலவரப்படி, எந்த ஒரு சுயேச்சை வேட்பாள ரும், மனுவை வாபஸ் பெறவில்லை. மேலும், தற்போது உள்ள, 70 வேட்பாளர்களில், 25க்கும் மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் தினகரன் துாண்டுதலில் தான் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஓட்டுச் சாவடியில், வேட்பாளர் சார்பில், ஒரு ஏஜன்ட் அனுமதிக்கப்படுவார். 

தினகரன் துாண்டுதலில், 25க்கும் மேற்பட்டோர், சுயேச்சையாக போட்டியிட்டால், அவரின் ஆதரவாளர்கள் அதிக அளவில், பூத் ஏஜன்டு களாக, ஒவ்வொரு பூத்களிலும் இடம் பெற வாய்ப்பு உருவாகும். 

இதன் மூலம், பூத்களை கைப்பற்றி, தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், கள்ள ஓட்டு போட சூழ்ச்சி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. அத்துடன், 63க்கும் மேற்பட்டோர் வேட்பாளர் களாக இருந்தால், ஓட்டுச்சீட்டு முறையில், ஓட்டுப்பதிவு நடக்கும்; அது, கள்ள ஓட்டுகள் போட மிகவும் வசதியாக இருக்கும் என்பதும், தினகரன் ஆதரவாளர்களின் கணிப்பு. 

அமைச்சர்கள் ஓட்டம்

இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு, தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவிலில், பெண்களுக்கு பணம் பட்டுவாடா நடப்பதாக தகவல் பரவியது.உடன், தி.மு.க., வட்டச் செயலர் குமார் உட்பட, கட்சி நிர்வாகி கள் திரண்டனர். அப்போது, கோவிலின் உள்ளே, அமைச்சர் உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன் இருந்ததை பார்த்ததும்,வெளி கதவை மூடிவிட்டு, தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

பிற கட்சிகளின் நிர்வாகிகளும் அங்கு குவிந்தனர். தேர்தல் அதிகாரிகள் வருவதற்குள் சுதாரித்த அமைச்சர்கள் மற்றும் அவர்களுடன் இருந்தவர்கள், கோவிலின் மற்றொரு வாயில் வழியாக, தப்பி ஓடினர்.தேர்தல் அதிகாரிகள் வந்து, கோவிலில் சோதனை செய்த போது, நோட்டுப் புத்தகம் ஒன்று சிக்கியது. அதில், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், அவர்களின் மொபைல் போன் எண்கள் குறிப்பிடப்பட்டிருந் தன. இதன் மூலம், பெண்களுக்கு, பணம் பட்டு வாடா செய்து, ஓட்டுகளைப் பெற திட்ட மிட்டதும் தெரிய வந்தது. 

இதுபோல, தினகரன் தரப்பினர், விதவிதமான முறைகளில், தொடர்ந்து பணம் வினியோகம் செய்து வருவதாகவும், போலீசார் அவர்களுக்கு உடந்தையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து, தேர்தல் அதிகாரிகளிடம் பல தரப்பினரும் புகார் செய்துள்ளனர். 

போலீஸ் உதவியுடன் பணம்பட்டுவாடா: மதுசூதனன் பகீர்

காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் உள்ள, விசைப்படகு மீனவர்கள் சங்க நிர்வாகிகளிடம், மதுசூதனன் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:

பன்னீர்செல்வம் மீண்டும் தமிழக முதல்வரா னதும், மீனவர்களின் அனைத்து குறைகளும் தீர்க்கப்படும். ஜெ., சொத்துகளை மீட்போம். தேர்தல் கமிஷன், ஒருதலை பட்சமாக செயல் படுகிறது.வாக்காளர்களுக்கு பணம் பட்டு வாடா செய்ய,தண்டையார் பேட்டை, புது வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர்கள், தினகரனின் ஏஜன்டுகளாக செயல்படுகின்றனர்; அவர்கள் மீது புகார் செய்யப்படும்.இவ்வாறு மதுசூதனன் பேசினார்.

Comments