ஆர்.கே.நகர் தாய்க்குலங்களின் ஆதரவு.. சிந்தாமல் சிதறாமல் அள்ளப் போவது யாரு?

பெண்கள் 1,34,307 OneIndia News : சென்னை: இடைத் தேர்தலை சந்திக்கும் ஆர்.கே.நகரில் பெண்களின் வாக்குகளே அதிகம். இதை வைத்துத்தான் அதிமுக அங்கு தொடர்ந்து ஜெயித்து வருகிறது. ஆனால் தற்போது ஜெயலலிதா மறைந்து விட்டதால் இந்த வாக்குகளைக் கவரப் போவது யார் என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதா இருந்தவரை ஆர்.கே.நகர் என்றில்லை, பொதுவாகவே தமிழகம் முழுவதும் பெண்களின் வாக்குகளை அதிமுக கவர்ந்து இழுத்து வந்தது கண்கூடு. ஆனால் தற்போது ஜெயலலிதா இல்லை. இதனால் பெண்களின் வாக்குகள் யாருக்குப் போகப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா இல்லாத முதல் இடைத் தேர்தல் என்பதால் இனிமேல் பெண்களின் வாக்குகளை பெறப் போவது யார் என்ற புதிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

மொத்த வாக்காளர்கள் கடந்த ஜனவரி 5ம் தேதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி ஆர்.கே.நகர் தொகுதியில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம்.

பெண்கள் 1,34,307 ஆர்.கே நகரில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 1,28,305 ஆகும். பெண் வாக்காளர்கள் எண்ணிக்க 1,34,307 ஆகும். மூன்றாம் பாலினத்தவர் 109 பேர் ஆவர். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,62,721 ஆகும்.

சசிகலா மீது கோபம் சசிகலா மீது பெண்கள் கொலை வெறியில் உள்ளனர். குறிப்பாக ஆர்.கே.நகர் தொகுதி பெண்கள்தான் படு ஆத்திரத்தில் உள்ளனர். ஜெயலலிதா முழுமையாக நம்பியது சசிகலாவைத்தான். ஆனால் அவரோ, ஜெயலலிதாவின் கடைசிக்காலத்தை மர்மமானதாக மாற்றி விட்டாரே என்ற பெரும் ஆதங்கம் பெண்களிடம் உள்ளது.

வாய்ப்பே இல்லை சசிகலா மீது இன்னும் இங்குள்ள பெண்களுக்கு கோபம் குறையாமலேயே உள்ளது. எனவே நிச்சயம் சசிகலா கட்சியின் வேட்பாளருக்கு பெண்களின் ஆதரவு கிடைக்கும் என்று உறுதியாக கூற முடியாத நிலையே காணப்படுகிறது.

தீபாவுக்கு கிடைக்கலாம் அதேசமயம், இங்குள்ள பெண்கள் மத்தியில் தீபாவுக்கு நல்ல ஆதரவு காணப்படுகிறது. குட்டி ஜெயலலிதாவாகவே அவரை பெண்கள் பார்க்கிறார்கள். எனவே ஆர்.கே.நகர் பெண்களின் ஆதரவு தீபாவுக்கு கணிசமாக கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

ஓ.பி.எஸ்ஸுக்கு போகலாம் அதேநேரத்தி்ல முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் பெண்கள் மத்தியில் கணிசமான கிரேஸ் உள்ளது. அந்த அடிப்படையில் ஓ.பி.எஸ்ஸுக்கும் நிச்சயம் கணிசமான வாக்குகள் பெண்களிடமிருந்து கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

திமுகவுக்கு? திமுகவுக்கு எந்த அளவுக்கு பெண்களின் வாக்குகள் கிடைக்கும் என்று தெரியவில்லை. பெண் வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில், அதற்காக சொற்ப வாக்குகள் கிடைக்கலாம். ஆனால் தீபா, ஓ.பி.எஸ்ஸே பாதிக்கும் மேலான வாக்குகளைப் பிரித்து விடுவார்கள் என்பதால் திமுகவுக்கு பெண் வாக்காளர்கள் பெரிய அளவில் வாக்களிப்பார்களா என்பது சந்தேகம்தான்.

Comments