இந்த குழுவின் தலைவராக, கட்சிக்கு பொதுச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா இருப்பார் என்றும், செங்கோட்டையன், தினகரன், வேணுகோபால், தமிழ்மகன் உசேன், பா.வளர்மதி, ஜஸ்டின் செல்வராஜ் உள்ளிட்டோர், உறுப்பினர்களாக இருப்பர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முதல்வராக இருக்கும் தன்னை அந்தப் பொறுப்பில் நியமிக்கவில்லை என்ற வருத்தம், பழனிச்சாமிக்கு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர், கட்சியின் துணைப் பொதுச் செயலராக இருக்கும் டி.டி.வி.தினகரன் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் தெரிகிறது.
இது குறித்து, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாவது:
என்னதான் தினகரன் கட்சியின் துணைப் பொதுச் செயலர் என்றாலும், முதல்வர் என்ற முறையில், பழனிச்சாமி, பல விஷயங்களில் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்றும், ஆட்சி அதிகாரத்தில், தேவையில்லாத பலருடைய தலையீடு இருக்கக் கூடாது என்றும் நினைக்கிறார்.
ஏற்கனவே, சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்து, சசிகலா முதல்வர் ஆக முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டதும், அவருக்கு பதிலாக, மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன் அல்லது ஜெயக்குமார் ஆகிய இருவரில் ஒருவரைத்தான், முதல்வர் ஆக்க சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் விரும்பினர். ஆனால், அவர்கள் நிறைய செலவு செய்து, எம்.எல்.ஏ.,க்களை எங்களால் இருத்தி வைக்க முடியாது என்று சொன்னதும்தான், சசிகலா தரப்பினர், பழனிச்சாமி பக்கம் திரும்பினர்.
அவர்கள் சொன்ன நிபந்தனைகளை ஏற்பதாகச் சொல்லி, நிறைய செலவு செய்துதான், எம்.எல்.ஏ.,க்களை சசிகலா அணி பக்கமே இருத்தி வைத்தார் பழனிச்சாமி. அதனாலேயே, அவரால், முதல்வராகி நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற முடிந்தது.
முதல்வர் சுற்றுப்பயணம்
இப்படி நிறைய செலவு செய்து, முதல்வரான பழனிச்சாமி, அதன் பின், தன்னை நிலை நிறுத்திக் கொள்ள, நேரடியாகவே ஆட்சி - அதிகாரத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதற்காக, மக்களை சந்திக்க அவர் விருப்பப்படுகிறார்.
தமிழக அரசால், கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்படாமல் பல மாதங்களாக அப்படியே இருக்கும் கட்டங்களையெல்லாம் திறந்து வைப்பதோடு, மக்கள் நல திட்டங்களையும் துவங்கி வைக்கலாம். சென்னையில் இருந்தே, கானொளி காட்சி மூலம் அதை செய்யலாம் என்று, அதிகாரிகள், முதல்வர் பழனிச்சாமியிடம் சொன்ன போது, அதை மறுத்தி விட்டார்.
'மக்களோடு மக்களாக கலந்து இருக்கவே நான் விரும்புகிறேன். திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களுக்கும், நானே நேரில் சென்று, மக்கள் நல திட்டங்களை தொடங்கி வைக்கிறேன்' என்று சொல்லித்தான், அந்த இடங்களுக்கு, காரிலேயே சென்று திரும்பினார் பழனிச்சாமி.
இப்படி, அவர் காரிலேயே திருநெல்வேலி வரை சென்ற போது, வழியில் இருந்த பல ஊர்களிலும் கட்சியினரையும், பொது மக்களையும் சந்தித்தார். இப்படி தனக்கென தனிப்பட்ட செல்வாக்கை, ஒரு முதல்வராக வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்திருக்கும் பழனிச்சாமி, சசிகலா குடும்பத்தினர் பெயரை அதிகமாக பயன்படுத்திக் கொண்டு கோட்டைக்கு காரியத்துக்கு வரும் எவருக்கும், பெரிய அளவில் எந்த உதவியும் செய்து கொடுக்க வேண்டாம் என, அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதனால், சசிகலா குடும்பத்தின் சிபாரிசு பேப்பர்களோடு வருகிறவர்களுக்கு, கோட்டையில் பெரிய வரவேற்பு இல்லை. அந்தத் தகவல், அ.தி.மு.க.,வின் துணைப் பொதுச் செயலர் தினகரனுக்கும் சென்றது. இதையடுத்து, கட்சியில், பழனிச்சாமிக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என, தினகரன் முடிவெடுத்து விட்டார். அதன் துவக்கம்தான், அவர், கட்சிக்கு புதிதாக அமைக்கப்பட்ட ஆட்சி மன்ற குழுவில், முதல்வராக இருக்கும் பழனிச்சாமியை, உறுப்பினராகப் போடாமல், அவருக்கு எதிராக அரசியல் செய்யும் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனை உறுப்பினர் ஆக்கி இருக்கிறார்.
பழனிச்சாமி கடும் அதிருப்தி
இந்த குழுவில், ஜஸ்டின் செல்வராஜ், தமிழ் மகன் உசேன் போன்ற, கட்சியின் அணி செயலர்களைக் கூட உறுப்பினர்களாக நியமித்து விட்டு, முதல்வராக இருக்கும் பழனிச்சாமியை நியமிக்காதது, அவருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சசிகலா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அந்த குழுவே, விரைவில் செல்லாது என, அறிவிக்கப்படும் சூழல் இருப்பதால், அதைப் பற்றி பெரிதாக யாரும் கவலைப்பட வேண்டாம் என, பழனிச்சாமி, தன் ஆதரவாளர்களை சமாதானப்படுத்தி வருகிறார்.
அதாவது, சசிகலா, பொதுச் செயலராக நியமிக்கப்பட்டதே செல்லாது என, தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அப்படி அறிவிக்கும்பட்சத்தில், அவர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆட்சி மன்றக் குழுவுக்கே அதிகாரம் இல்லாமல் போகும் என்பதுதான், பழனிச்சாமியின் வாதம்.
பழனிச்சாமிக்கும், தினகரனுக்கும் இப்படி ஏற்பட்டுள்ள புகைச்சல், நாள் ஆக ஆக கூடுதலாகும் என்று கட்சியினர் மத்தியில் பரவலான பேச்சிருக்கிறது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
Comments