தினகரன் கட்சி உறுப்பினரே இல்லை: மாபா பாண்டியராஜன்

தினமலர் செய்தி : புதுடில்லி : தினகரன் கட்சி உறுப்பினரே கிடையாது. அதனால் அவர் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது செல்லாது என முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

உறுப்பினரே இல்லை :

தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதியை சந்திப்பதற்காக ஓபிஎஸ் அணியினர் டில்லி சென்றுள்ளனர். அங்கு தனியார் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன், தினகரன் , அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினரே கிடையாது. 2012 ல் மன்னிப்பு கடிதம் கொடுத்ததாக அவர் கூறுகிறார். ஆனால் அவர் கொடுத்த மன்னிப்பு கடிதம் ஜெயலலிதாவால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 

விரைவில் வேட்பாளர் அறிவிப்பு :

சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என தேர்தல் கமிஷனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அது குறித்து தேர்தல் கமிஷன் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆகையால், தினகரன் துணைப் பொதுச் செயலரா என்பது பற்றி தேர்தல் கமிஷன் தான் முடிவு செய்ய வேண்டும். கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூடி இன்னும் ஓரிரு நாளில் ஜெயலலிதாவின் அதிமுக சார்பில் ஆர்கே நகரில் போட்டியிடும் வேட்பாளரை அறிவிப்போம் என்றார்.

இதே போல் மைத்ரேயன் கூறுகையில், சசிகலா தேர்வு செல்லாது, ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகார் மனு மற்றும் இரட்டை இலை யாருக்கு என்பது தொடர்பாக வேட்புமனு தாக்கல் நிறைவடைவதற்கு முன் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார்.

Comments