ஜெ., மரணம் தொடர்பாக ஓ.பி.எஸ்., உள்பட பலர் சந்தேகம் கிளப்பி வருகின்றனர். இந்நிலையில் ஜெ., வுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினரிடம் அறிக்கை தருமாறு தமிழக அரசு கேட்டிருந்தது. இதனையடுத்து இந்த அறிக்கை சுகாதார துறை செயலரிடம் வழங்கப்பட்டது. 5 சிறப்பு டாக்டர்கள் குழுவினர் இதில் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். இதனை தமிழக அரசு இன்று மாலை வெளியிட்டது. இதில் கூறப்பட்டிருப்பதாவது:
நல்ல முறையில் சிகிச்சை :
ஜெயலலிதா நீர்ச்சத்து குறைபாடு, நுரையீரல் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். செப்.22 ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக அவர் மயக்க நிலையில் இருந்தார். அவரை அழைத்து வர ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டது. ஜெ., தாக்கப்பட்டதற்கான ஆதாரம் ஏதுமில்லை. அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் நல்ல முறையில் சகிச்சை அளித்துள்ளனர். இது பாராட்டுக்குரியது . ஜெ., மரணம் தொடர்பான குற்றச்சாட்டு ஆதாரமற்றவை. காவிரி பிரச்சனை குறித்து மருத்துவமனையில் விவாதித்தார்..
ஜெ.,வை காப்பாற்ற முயற்சிகள் :
இதயம், நரம்பு ஆகியன செயல்பாட்டில் முன்னேற்றம் இல்லாமலே இருந்தது. இதய செயலிழப்பு ஏற்பட்ட போது அனைத்து வழியிலும் ஜெ.,வை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. டிச.5 ம் தேதி இரவு 11.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. இத்தகவல் சசிகலா, தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
டில்லியில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியதாவது:
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக தேவையற்ற வதந்திகள் பரவி வருகிறது. இதை கருத்தில் கொண்டு, ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக, விரிவான அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மாநில அரசின் கோரிக்கையை ஏற்று எய்ம்ஸ் மருத்துவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு 5 முறை வருகை தந்தனர். அப்பல்லோ மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் தமிழக அரசு மருத்துவர்கள் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்தனர். அவருக்கு உலக தரத்திலான சிகிச்சை அளிக்கப்பட்டது.
மத்திய அரசிடமிருந்து கேட்டு எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்து பரவும் அனைத்து வதந்திகளும் பொய்யானவை.இவ்வாறு அவர் கூறினார்.
Comments