ஈரோட்டில் கமல் உருவ பொம்மையை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது

கைது OneIndia News : சென்னை: ஈரோட்டில் நடிகர் கமல்ஹாசன் உருவ பொம்மையை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். நடிகர் கமல்ஹாசன் இந்துக்களின் புனித நூலான மகாபாரதத்தில் வரும் பாஞ்சாலியை பணயம் வைத்து ஆடிய நிகழ்வை இடித்துரைக்கும் விதமாக தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். இந்நிலையில் மகாபாரதத்தை மட்டுமின்றி, இந்துக்களின் கலாசாரத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் கமல் தொடர்ந்து பேசி வருவதாக கூறி இந்து மக்கள் கட்சியினர் கண்டனம் தெரிவித்து நேற்று ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஈரோட்டில் பரபரப்பு ஈரோடு மாவட்ட இந்து மக்கள் கட்சியினர் ஈரோடு எம்.ஜி.ஆர். சிலை அருகில் நடிகர் கமல்ஹாசனின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது போலீசார், நடிகர் கமல்ஹாசனின் உருவபொம்மையை எரிக்க விடாமல் தடுத்தனர்.

கைது இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் தலைமையில், மாவட்ட அமைப்பாளர் பிரகாஷ், செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கமலின் உருவ பொம்மையுடன், காரில் வந்தனர். பொம்மையை காரில் இருந்து இறக்கி, எரிக்க முயன்றனர். மூவரையும் போலீசார் கைது செய்து, அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து பேசுகிறார் தமிழ்செல்வன், நிருபர்களிடம் கூறியதாவது: சினிமா படங்கள், பேட்டிகளில் இந்து மதத்தை தொடர்ந்து இழிவாக, கமல் பேசி வருகிறார். இந்துக்களின் புனித நூல், கடவுள்கள், கலாசாரத்தை கேவலமாக, தவறாக பேசி உள்ளார்.

படங்களை தடுப்போம் தமிழர்களின் தாய் மதத்தை அவர் களங்கப்படுத்தி உள்ளார். தொடர்ந்து அவர் இதுபோல், இந்து மதத்தை இழிவாக பேசினால், கமல்ஹாசன் படத்தை தியேட்டர்களில் திரையிட விடாமல் தடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

தூண்டுதல் காரணமா? கமல்ஹாசன் தனது பேட்டியின் பெரும்பகுதியில் அதிமுகவைதான் விமர்சனம் செய்தார். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக முக்கிய பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் இப்போராட்டம் நடைபெற்றுள்ளது. இது உண்மையிலேயே மகாபாரதம் குறித்த பேச்சுக்காகவா, அல்லது போராட்டத்தின் பின்னணியில் அதிமுக உள்ளதா என்பதை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Comments