எதுவுமில்லை சட்டசபையில் 2017-18 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, மக்களின் நலன் சார்ந்ததாகவுமில்லை, மாநிலத்தின் வளர்ச்சிக்கும் துணை நிற்கவில்லை என்பதை, வாக்களித்த மக்களே உணர்ந்திருக்கிறார்கள். ஆளுபவர்களும் அதை உணர்ந்த காரணத்தாலோ என்னவோ, வழக்கமாக ஒரு மாதத்திற்கு மேல் நடைபெறக்கூடிய சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை ஒரு வார காலத்திற்குள்ளாக முடித்துவிட்டு, மொத்தக் கவனத்தையும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பக்கம் திருப்பியிருக்கிறார்கள்.
வாட் வரி உயர்வு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தவற்கு முன்பாகவே பெட்ரோல்-டீசல் மீதான ‘வாட்' வரியை அதிகப்படுத்தியும், போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மறைமுகக் கட்டணங்களை விதித்தும் மக்களை வஞ்சித்த இந்த அரசு, வரியில்லா பட்ஜெட் என்ற போலிப் பெருமையுடன் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
கல்லறை பூஜை சட்டமன்ற மாண்புகளின்படியும் மரபின்படியும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, அது தலைமைச் செயலகத்தை விட்டு வெளியே செல்லாது. ஆனால், மாண்புக்கும்-மரபுக்கும் தொடர்பில்லாத இந்த ஆட்சியில், நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் அவர்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு எடுத்துச் சென்று, கல்லறையில் வைத்து பூஜித்துவிட்டு வந்தார். இது குறித்து, 21-3-2017 அன்று நான் பேரவையில் கேள்வி எழுப்பினேன்.
நிதிநிலை அறிக்கை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற வேண்டிய குறுகிய நாள் இடைவெளியில், அந்த விவாதத்தைத் திசை திருப்பும் போக்கையே ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் பெருமளவில் கடைப்பிடித்தனர். காரணம், இந்த அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையின் மீது விவாதிப்பதற்கு எதுவுமில்லை.
ரூ.1 லட்சம் கோடி 2011ல் அம்மையார் ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டை பன்முக சமூக பொருளாதார மாநிலமாக மாற்றி 1,20,000 கோடி ரூபாய் கூடுதல் வருமானத்தை 5 வருடங்களில் ஈட்ட நடவடிக்கை எடுப்போம். 1 லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்ற தலைகுனிவிலிருந்து மீட்டு, ஒவ்வொரு தமிழரும் தலைநிமிர்ந்து நிற்க நடவடிக்கை எடுக்கப்படும்? என்று வாக்குறுதி தரப்பட்டிருந்தது.
கடன் சுமை அதிகரிப்பு இந்தியா சுதந்திரமடைந்த 1947ஆம் ஆண்டிலிருந்து, 2011ஆம் ஆண்டுவரை தமிழகத்தில் நடைபெற்ற அத்தனை ஆட்சிகளிலும் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் காரணமாக ஏற்பட்ட நிதிச்சுமைதான் 1 லட்சம் கோடி கடன் தொகை என்பதாகும். ஆனால் 2011லிருந்து இன்றைய நாள் வரை ஆட்சி செய்யும் அ.தி.மு.க அரசின் நிர்வாக சீர்கேடுகளால் மட்டும் கடந்த ஐந்தரை ஆண்டுகளில் இரண்டு லட்சம் கோடிக்கும் மேலான நேரடி கடன் சுமை ஏறி, தற்போது தமிழக அரசின் கடன்தொகை என்பது 3.14 லட்சம் கோடி ரூபாய் என்ற மோசமான நிலையில் உள்ளது. இதனால் ஒவ்வொரு தமிழரின் தலையிலும் 36ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடன் சுமத்தப்பட்டு தலை குனிந்து நிற்க வேண்டிய நிலையைத்தான் அ.தி.மு.க. அரசு உருவாக்கி இருக்கிறது. இதையெல்லாம் பேரவையில் எடுத்துக் கூறியபோது ஆட்சியாளர்களிடமிருந்து உரிய பதில் எதுவும் வரவில்லை.
மரபுகள் மீறல் பேரவை நிகழ்வுகள் என்பது நம்மைத் தேர்வு செய்து, தங்களின் பிரதிநிதிகளாக அனுப்பி வைத்த ஜனநாயகத்தின் எஜமானர்களான பொதுமக்களுக்கு பயன் விளைவிக்க வேண்டும். ஆனால், அ.தி.மு.க ஆளுங்கட்சியாக உள்ள அவையில் மக்களின் நலன் குறித்து சிந்திப்பதில்லை. குற்றவாளிகளையும் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்றவர்களையும் ஆராதனை செய்வதில்தான் ஆனந்தம் கொள்கிறார்கள். அவை மாண்புகளை மதிப்பதில்லை. மரபுகளைக் கடைப்பிடிப்பதில்லை.
முதலிடம் நமக்கே நிதி நிலை அறிக்கை மீதான விவாதங்கள் மிகக் குறுகிய கால அளவிலேயே நடைபெற்றிருந்தாலும், சட்டமன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை உணர்ந்து கழகம் தன் கடமையை நிறைவேற்றியுள்ளது. எதிர்க்கட்சி வரிசையிலே இருந்தாலும், மக்கள் நலனுக்காக செயல்படுவதில் பேரவையில் முதலிடம் நமக்குத்தான். எண்ணிக் கையிலும் முதலிடம் பெறுகின்ற காலம் விரைந்து வருகிறது. சட்டமன்றத்தைப் போலவே மக்கள் மன்றத்திலும் செயல்படுவோம். இடைத்தேர்தல் களம் நமது தொடர் வெற்றிகளுக்கான முன்னறிவிப்பாக அமையப் பணியாற்றுவோம்.
Comments