டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகரில் போட்டியிட முடியாது

தினமலர் செய்தி : சசிகலாவுக்கு, மக்களிடம் கடும் எதிர்ப்பு நிலவும் நிலையில், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், அவரது அக்கா மகன் தினகரன் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல், அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அபராதம் ஆகியவற்றையும் மீறி, அரசியலில் அவர் ஆட்டம் போட தீட்டியுள்ள திட்டம் செல்லுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஜெ., மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டுள் ளது. எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பதால், சசி அணியினர், ஆட்சியை தக்க வைத்து கொண்டனர். ஆட்சியை இழந்த பன்னீருக்கு, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், ஆதரவு தெரிவித்துள்ளனர். 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சசிகலா, கட்சியின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்கக் கோரி, தேர்தல் கமிஷனில், பன்னீர் தரப்பினர் மனு கொடுத்துள்ளனர். அதில், தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்; கட்சியும் தங்கள் வசம் வரும் என, பன்னீர் அணியினர் நம்புகின்றனர். 

இந்த சூழ்நிலையில், யாருக்கு செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்க, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வந்துள்ளது. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, கட்சி தொண்டர் களுக்கும், பொதுமக்களுக்கும் வெறுப்பு உள்ளதால், தினகரன் களம் இறங்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. 

அதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல், அவர் தான் வேட்பாளர் என, நேற்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.அவரை வீழ்த்த, பன்னீர் அணியினர், பலமான வேட்பாளரை களம் இறக்க முடிவு செய்துள்ளனர். ஜெ., அண்ணன் மகள் தீபாவும், சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். 

இது போன்ற நெருக்கடிகளுக்கு இடையில், இரட்டை இலை சின்னத்தை பறிக்கும் முயற்சி யிலும், பன்னீர் தரப்பினர் தீவிரமாக இறங்கி உள்ளனர்.கட்சியின் பொதுச்செயலர் நியமனமே, சட்ட சிக்கலை ஏற்படுத்தி உள்ள தால், இரட்டை இலை சின்னம், தினகரனுக்கு கிடைப்பது உறுதியாகாத நிலை உள்ளது. இதைப் பற்றி கவலைப்படாமல், தினகரன் போட்டியிடப் போவதாக அறிவித்து விட்டார்.

மோசடி வழக்கு

இவர், 1995 - 96ம் ஆண்டு, சட்ட விரோதமாக, வெளிநாட்டு பணத்தை பெற்றதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், அவர் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்தது. அதிலிருந்து தப்பிக்க, 'நான் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவன்' என, தினகரன் வாதிட் டார். இதை, அமலாக்கத்துறை ஏற்கவில்லை. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 28 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

எனவே, அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என, தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்க, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சி களும் தயாராகி உள்ளன.இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே, முதல்வர் பதவியை பிடிக்க முடியும்; கட்சியையும், ஆட்சி யையும் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்ற திட்டத்துடன், தினகரன், தேர்தல் களம் இறங்கி உள்ளார்.ஆனால், அவரது வேட்பு மனுவை, தேர்தல் கமிஷன் ஏற்று கொள்ளுமா, அவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா, மக்கள் ஓட்டளிப்பரா என, பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால், தினகரன் திட்டம் செல்லுபடியாகுமா என்பது தெரியவில்லை.

Comments