பரிதாபம்! டில்லியில் போராடும் தமிழக விவசாயிகள் நிலை... விளம்பர அரசியல்வாதிகளால் தொடரும் குழப்பம்

டில்லியில், தமிழக விவசாயிகளின் போராட்டம் சூடுபிடித்து உள்ள நிலையில், அரசியல்வாதிகள் ஆளாளுக்கு வந்து பார்வையிட்டு, புகைப்படத்துக்கு, 'போஸ்' கொடுத்து விட்டு, விளம்பரம் தேடிச் செல்கின்றனர்.

டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், தமிழக விவசாயிகள் இரண்டு வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். துவக்கத்தில் சாதாரண மாகவே இது ஆரம்பித்தது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அவர்களுடன் பேசிய தும், ஒரு சில தினங்களில் முடிவதாகவும் இருந்தது.

ஆனால், விவசாயிகளுக்கு, உணவு உள்ளிட்ட வசதிகளை, டில்லி வாழ் தமிழர்கள், கல்லுாரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், சில வழக்கறிஞர்கள் ஏற்படுத்தி தந்து, சமூக ஊடகங் களில் பிரபலமாகவே, நிலைமை மாறியது. இதையடுத்து, அரசியல்வாதிகள் முதல், நடிகர்கள் வரை அடுத்தடுத்து வர ஆரம்பிக் கவே, போராட்டத்தை முன்நின்று நடத்தும், அய்யாக்கண்ணுவும், 'பிஸி' ஆனார். 

'போட்டோவுக்கு போஸ்'

தமிழகத்தில் இருந்து வரும் அரசியல்வாதிகள், போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் சிறிது நேரம் அமர்ந்து பேசுகின்றனர். பின், தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, சில விவசாயிகளை அழைத்துச் சென்று, சில நிமிடம், மத்திய அமைச்சர்களை சந்தித்து, போட்டோவுக்கு, 'போஸ்' கொடுக்கின்றனர். பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்து விட்டு, சென்னைக்கு, விமானத்தில் பறந்து விடுகின்றனர்.

இது தான், ஜந்தர் மந்தரில் தினமும் நடக்கும் நிகழ்வு. ஆனால், இந்த போராட்ட வடிவமும், முன்னெடுக்கப்படும் முறையும், விவசாயி களுக்கு பயனை தருமா என்ற கேள்வி முக்கியமானது. இதில், காரியம் ஆற்ற வேண்டிய வர்கள், மத்திய, மாநில அரசுகள் தான்; இந்த இருவரால்மட்டுமே, இப்பிரச்னையில், எதையுமே செய்ய முடியும்.

அதிலும், அ.தி.மு.க.,வின் அதிகார மற்றும் அரசியல் பலம் தான், தீர்வை நோக்கி, நெருக்கித் தள்ள முடியும். எந்த பிரச்னையிலுமே அரசியல் ரீதியி லான, 'லாபி' செய்பவர்கள் தான், டில்லியில் காரியம் சாதித்து வருகின்றனர்.

நெருக்கடி

துரதிருஷ்டவசமாக தமிழகத்துக்கு என, லாபி செய்ய, டில்லியில் ஆளே இல்லை. தமிழகத்தைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்களால், மத்திய அமைச்சர்களிடம் நேரம் வாங்கித் தந்து, சால்வை போட வைத்து, கோரிக்கை மனு தர வைத்து, போட்டோ எடுத்து அனுப்பி வைக்க மட்டுமே முடியும்.

தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருப்பவர்கள், டில்லியில் இருப்பவர்களிடம், வெவ்வேறு வழிகளில் பேசியோ, பார்லிமென்டில் நெருக்கடி தந்தோ, தந்திர உபாயங்களை கையாண்டோ, காரியம் சாதிக்க வேண்டும்.அது நடக்கவில்லை என்றால், அரசியல்வாதிகள் அரங்கேற்றும், ஊடக விளம்பர நாடகங்களில், தங்களை அறியாமலேயே, அப்பாவி விவசாயிகளும் கதாபாத்திரங்களாவது, தவிர்க்கவே இயலாது.

போலியான பிரமிப்பு

தமிழகத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ள டில்லியில், பெரிய அளவில் கூட்டத் தைக் கூட்டி, மத்திய அரசை பணிய வைப்பது இயலாத காரியம். பல்வேறு அரசியல் நெளிவு சுளிவுகளைக் கொண்ட தந்திர பூமியான டில்லி யில் வீரத்தை விட, விவேகம் தான் எப்போதுமே வென்று வருகிறது. மத்திய அரசின் மாபெரும் நிர்வாக இயந்திரத்தை, அரசியல் ரீதியிலான அழுத்தம் மூலமாக மட்டுமே திருப்ப முடியும்.

பாஷை தெரியாத ஊரில், கோவணம், அரை நிர்வாணம், மண்டை ஓடு, பாம்புக் கறி, எலிக் கறி, தற்கொலை முயற்சி என, நாள்தோறும் பரிதாபமாக பெண்கள் உட்பட விவசாயிகள் போராடிக் கொண்டிருக்க, அதில் அரசியல் வாதிகள், போலியான பிரமிப்பை ஏற்படுத்துவ தாகவே தெரிகிறது.

எம்.பி.,க்களை காணோம்!

தற்போதுகூட பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கிறது. அனைத்து கட்சிகளின், எம்.பி.,க் களும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். அ.தி.மு.க.,வின் இருக்கைகள் அத்தனையும் காலி; 

தமிழக எம்.பி.,க்களைத் தேட வேண்டியுள்ளது

விசாரித்தால், 'ஆர்.கே.நகர்' என பதில் வருகிறது. முக்கிய மசோதாக்கள், கொள்கை முடிவுகள், திட்டங்கள், நிதி ஒதுக்கீடு என, பல விஷயங்கள் தினந்தோறும் இரண்டு சபை களிலும் அலசப்படுகின்றன. ஆனால், தமிழக பிரதிநிதிகளை மட்டும் காணோம்.துணை சபாநாயகர் மட்டும் தென்படுகிறார். அவருக்கு ஆர்.கே.நகருக்குள் கிடைத்த, 'வரவேற்பால்' லோக்சபாவே போதுமென டில்லியில் உள்ளார் என கூறுகின்றனர்.

Comments