"குரங்கு கையில் பூமாலை"... சசிகலாவை குத்தம் கூறிய நத்தம்!

கவுன்சிலர் கூட ஆகமுடியாதுOneIndia News : திண்டுக்கல்: மக்கள் திலகம் எம்ஜிஆர் படைத்த அதிமுகவை, ஜெயலலிதா பொக்கிஷமாக பாதுகாத்தார், ஆனால் தற்போது சசிகலா தரப்பு அதிமுகவை ஒன்றுமில்லாமல் ஆக்குவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.

திண்டுக்கல் நகரில் அதிமுக (ஓ.பன்னீர்செல்வம்) செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அவர் பேசுகையில், ஓ.பன்னீர்செல்வம் பின்னால் இருப்பதுதான் உண்மையான அதிமுக என்றார்.

சில பதவிகளுக்காக அதிமுகவில் சில சட்டசபை உறுப்பினர்கள் சசிகலா தரப்புடன் இருக்கின்றனர் என்றும் நத்தம் விஸ்வநாதன் கூறினார். பெருவாரியான மக்கள் பன்னீசெல்வம் பக்கம்தான் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அவரது பேச்சிலிருந்து:

பன்னீருக்கு மக்கள் செல்வாக்கு

ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது யாருமே அவரை பார்க்க முடியவில்லை. அதற்கு சசிகலா தரப்பு அனுமதி வழங்கவில்லை. உண்மையான அதிமுக யார் என்பதை தெரிந்து கொள்ள, தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய சசிகலா ஆதரவு 122 எம்.எல்.ஏக்களும் தயாரா?

நாங்க ரெடி.. நீங்க ரெடியா?

ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 11 பேரும் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளோம். இந்த சவாலுக்கு ரெடியா. இப்போது நடக்கும் ஆட்சி மன்னார்குடி மாபியா குடும்ப ஆட்சி. தமிழகத்தில் உள்ள 99% பெண்கள் சசிகலாவை எதிர்த்து வருகின்றனர். இந்த ஆட்சியை நீக்கிவிட்டு உண்மையான கழக ஆட்சியை அமைக்க பாடுபட வேண்டும்.

குரங்கு கையில் பூமாலை

எம்ஜிரா் அதிமுகவை கடந்த 1972-ஆம் ஆண்டு தொடங்கினார். அதை அவரது மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா 32 ஆண்டுகளாக கட்டிக் காத்தார். தேசிய அளவிலும் பெரிய இயக்கமாக உருவெடுத்துள்ள அதிமுக தற்போது குரங்கு கையில் பூ மாலையைப் போல சசிகலா தரப்பிடம் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது.

விரைவில் ஓபிஎஸ் பக்கம்

சசிகலா கும்பலுக்கு லஞ்சம் கொடுத்து மாளமுடியாமல் விரைவில் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர் செல்வம் பக்கம் வருவர் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதற்கு சசிகலாதான் காரணம். இதனால் எதிர்க்கட்சிகள் ஜெயலலிதாவுக்கு அவப்பெயரை உண்டாக்குகின்றன.

கவுன்சிலர் கூட ஆகமுடியாது

திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டால் வார்டு கவுன்சிலராகக கூட வரமாட்டார். ஜெயலலிதா சசிகலா கும்பலால் இறப்பார் என்று தெரிந்திருந்ததாலோ என்னவோ, சசிகலா எப்போதும் அரசியலுக்கு வரக்கூடாது என்றும், அவர் எப்போதும் தனக்கு பணிவிடை செய்பவர் மட்டுமே என்றும் தனது அரசியல் வாரிசு ஓ.பன்னீர் செல்வம்தான் என்றும் ஜெயலலிதா அவ்வப்போது எங்களிடம் கூறியுள்ளார் என்றார் அவர்.

Comments