ஜெ., மருத்துவ அறிக்கை வெளியீடு: பின்னணியில் நடந்தது என்ன?

தினமலர் செய்தி : சென்னை: நாளை (மார்ச் 8ம் தேதி) சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு, பன்னீர்செல்வம் தரப்பினர் நடத்தத் தீர்மானித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, ஜெயலலிதா மரணத்தில் தொடர்புடைய மர்மங்களை அரசும் சேர்ந்து மறைக்கிறது என்ற குற்றச்சாட்டு, தமிழக அரசுக்கும் ஏற்படலாம் என்று, தமிழக உளவுத் துறை அறிக்கைக் கொடுத்ததையடுத்துத்தான், அரசுத் தரப்பில் வேக வேகமாக காரியங்கள் துவங்கின.

மக்கள் அதிருப்தி:

இது குறித்து, கோட்டையின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜெயலலிதா மரணத்தில் மரமம் இருப்பதாக, பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். ஜெயலலிதா போயஸ் தோட்டத்திலேயே கடுமையாக தாக்கப்பட்டார் என்பதில் ஆரம்பித்து, அவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டது என்பது வரையில், அதிர்ச்சிகரமான தகவல்களை தொடர்ந்து, அவர்கள் வெளியிட்டு வருகின்றனர். இவை எதற்கும், தமிழக அரசு தரப்பிலோ, சசிகலா தரப்பினரோ எந்த பதிலும் கூறாமல் இருந்து வந்தது, அரசு மற்றும் சசிகலா தரப்பு மீது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை கேட்டு, பன்னீர்செல்வம் தரப்பினர் தமிழகம் முழுவதும் மார்ச் 8ல், உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்த உண்ணாவிரதம் எழுச்சியையும்; தாக்கத்தையும் ஏற்படுத்தும் என, தமிழக உளவுத்துறை அதிகாரிகள், அரசுக்கு அறிக்கை அனுப்பினர்.

மக்கள் நம்புவார்கள் :

அதையறிந்ததும், முதல்வர் பழனிச்சாமி அதிர்ந்து போனார். உண்ணாவிரதப் போராட்டம் உப்பு, சப்பில்லாமல் போக வேண்டும்; அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று, அதே உளவுத் துறை அதிகாரிகளை அழைத்து கேட்டார். அப்போது, அவர்கள், அப்பல்லோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்களை வெளியிட வேண்டும். அப்போதுதான், ஓரளவுக்காவது, இந்த விஷயத்தில் அரசை மக்கள் நம்புவார்கள். இல்லையென்றால், சந்தேகம் கூடுதலாகுமே தவிர, குறையாது என வெளிப்படையாக சொல்லியிருக்கின்றனர். அதன்பின், தமிழக சுகாதாரத் துறை அமைச்சரையும்; அதிகாரிகளையும் முதல்வர் அழைத்துப் பேசி, அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று சொன்னதன் அடிப்படையில், சுகாதாரத் துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், ஏற்கனவே பெறப்பட்ட அப்பல்லோ மருத்துவமனை அறிக்கையுடன், டில்லி சென்று, அங்கு எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்தை அணுகி, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் அறிக்கையை கேட்டுப் பெற்று, ரிலீஸ் செய்திருக்கிறார்.

பன்னீர்செல்வம் தரப்பினர் நடத்தவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுவதற்கு முன், இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தாலும், இத்தனை நாள் இல்லாமல், இன்றைக்கு ஏன் திடீரென அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும், ஏற்கனவே மருத்துவர்கள் சொன்ன தகவல்களுக்கு முன்னுக்கு பின் முரணாக உள்ளது என்றும் கூறுகின்றனர். இதனால், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை ஓரளக்கு கிளியர் செய்துவிட்டோம் என, மருத்துவத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.ஆனால், என்ன சொன்னாலும், தமிழக அரசின் நடவடிக்கைகளை மக்கள் நம்பத் தயாராக இல்லாததால், அரசுக்கும் சசிகலா தரப்பினருக்கும் சிக்கல் நீடிக்கிறது.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

கோர்ட் சிக்கல் வேண்டாம்!

சென்னையில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் என்று, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அனுமதி கடிதம் கொடுத்து, பன்னீர்செல்வம் தரப்பு பல நாட்கள் காத்திருந்து விட்டு, நினைவூட்டல் கடிதமும் கொடுத்தது. இப்படி முறையாக செய்வதே, அனுமதி அளிக்காத பட்சத்தில் கோர்ட்டுக்கு செல்லும் எண்ணத்துடனேயே செய்யப்படுபவை என்று முடிவெடுத்த தமிழக அரசு, தேவையில்லாமல், கோர்ட்டில் குட்டு வாங்க வேண்டாம் என முடிவெடுத்து, அனுமதி அளித்து விட்டது. இதனால், பன்னீர்செல்வம் தரப்பினர் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

Comments