ஆட்சி, அதிகாரத்துக்காக அரசியல் செய்யக்கூடாது!:தினகரனுக்கு முதல்வர் பழனிசாமி 'குட்டு'

கோவை : ''ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்என்பதற்காக, அரசியல் நடத்துவது மக்கள் விரோத செயலாகும்,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார். தினகரனின் முதல்வர் பதவி கனவை கண்டிக்கும் வகையில், அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கான பல்வேறு திட்டங்கள் துவக்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கோவை, 'கொடிசியா' வளாகத்தில் நேற்று நடந்தது.நான்கு மாவட்டங்களிலும், 1,313 கோடியே, 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 8,031 திட்டப் பணிகளை துவங்கி வைத்து, முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

கடந்த, 2015ல், அ.தி.மு.க., அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால், 4.70 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்கக்கூடிய, 2.43 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அடுத்த முதலீட்டாளர்கள் மாநாட்டையும் இந்த அரசு வெற்றிகரமாக நடத்தும்.

பவானி மற்றும் அதன் கிளை நதிகளில், கேரளா அரசு தடுப்பணைகள் கட்டுவதைத் தடுக்கும் வகையில், தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி பற்றிய இலக்கணத்தை ஜெ., தெளிவாக எடுத்துரைத்துஉள்ளார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மட்டுமே அரசியல் நடத்துவது மக்கள் விரோதச் செயலாகும்.

தாங்கள் இல்லையென்றால், நாடே இயங்காது என்று பலர், மக்களிடையே ஒரு மாயையை உருவாக்கி வருகின்றனர். அவர்கள், தங்களை மாற்றி கொள்ள வேண்டும். கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள பல லட்சம் தென்னை விவசாயிகள், ஆல்கஹால் இல்லாத சத்து பானம், 'நீரா' தயாரிக்க அனுமதி கோரியுள்ளனர்; அந்த கோரிக்கையை, அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு பழனிசாமி பேசினார். 

அ.தி.மு.க.,வின், தற்காலிக பொது செயலராக அறிவிக்கப்பட்டுள்ள தினகரன், ஆர்.கே.நகரில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். 'முதல்வர் பதவிக்கு வர மாட்டேன்' என, அவர் அறிவித்திருந்தாலும், வெற்றி பெற்றால், முதல்வர் பதவியில் அமர முடிவு செய்துள்ளார்.

இதன்மூலம் தன் பதவி ஆட்டம் காணும் என்பதால், எதிர்க்கட்சியை திட்டும் பாணியில், 'ஆட்சி, அதிகாரத்திற்காக அரசியலை பயன்படுத்த கூடாது' என மறைமுகமாக, தினகரனை பழனிசாமி கண்டித்து பேசியிருப்பதாக, அரசியல்ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Comments