பூஜ்ஜியத்தை ராஜ்ஜியமாக்க முயற்சி; பட்ஜெட் குறித்து ஸ்டாலின் கருத்து

தினமலர் செய்தி : சென்னை: தமிழக பட்ஜெட் தொடர்பாக தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: பினாமி ஆட்சி சார்பில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் துவங்கிய நேரத்தில் நிதி அமைச்சர் ஜெயக்குமார், சுப்ரீம் கோர்ட்டால் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு 4 வருடம் சிறை , 100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட ஜெயலலிதா பெயர், அதைவிட கொடுமை ரூ.10 கோடி அபராதம், 4 வருட சிறை தண்டனை பெற்ற சசிகலாவின் பெயரையும் உச்சரித்து, பெரா வழக்கில் சிக்கி அபராதம் கட்டி புகழ் பெற்றிருக்கக்கூடிய தினகரன் பெயரையும், கூறி பேசினார். நான், குற்றவாளி பெயரை கூறி அவை மரபை அசிங்கப்படுத்த கூடாது என குரல் எழுப்பினேன். ஆனால் பெயரை கூறலாம் என அவை தலைவர் தீர்ப்பு தருகிறார். இடைப்பாடி தலைமையில் அமைந்துள்ள பினாமி அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது 4 அமைச்சர்கள் வரவில்லை. இதற்கு காரணம் தெரியவில்லை. ஒருவேலை உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனரோ, உட்கட்சி பிரச்னை தொடர்பாக தேர்தல் ஆணையத்தை சந்திக்க சென்றுள்ளனரா, பெங்களூரு சிறையில் உள்ள அவர்களது தலைவியை சந்திக்க சென்றுள்ளனரா என எண்ணத்தோன்றுகிறது. மேலும், பல்வேறு பணிகளுக்கு டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. அதில் வசூலை கண்காணிக்க சென்றுள்ளனரோ என சந்தேகம் வருகிறது.தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், புதிய மொந்தையில் பழைய கள் என்ற வகையில் அமைந்துள்ளது. ஜெ., தலைமையில் இருந்த ஆட்சியாக இருந்தாலும் ஓபிஎஸ் ஆட்சியாக இருந்தாலும், இடைப்பாடி தலைமையில் பினாமி ஆட்சியாக இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் கடன் மட்டமே அதிகரித்து வருகிறது. 31.3. 2018 அன்று 3.14, லட்சம் கோடி ரூபாய்கடனாக இருக்கும் என கூறியுள்ளார்கள். இது தான் அரசின் சாதனை. புதிய திட்டங்கள் எதுவுமே கிடையாது. விவசாயிகள் கடன் தள்ளபடி என்ற செய்யவில்லை. உலக முதலீட்டாளார் மாநாட்டின்போது 88 ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. புதிய மின் திட்டங்கள் எதுவும் கிடையாது.ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கவர்னர் உரை, இடையில் அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை மறைந்த ஜெ.,வால் துவங்கப்பட்ட தொலை நோக்கு திட்டம் - 2023 திட்டம், 110 வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதியில்லை. இந்த நிலையில் தான் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்பதுதான் உண்மை. அரசு நிர்வாகம் நிதிநிர்வாகம் ஆகிய அகல் விளக்கை, குற்றவாளி வழிநடத்தும் ஆட்சியால் அணைக்கப்பட்டு சாம்பலாக்கப்பட்டுள்ளது என்பது தான் உண்மை. பூஜ்ஜியத்தை ராஜ்ஜியமாக ஆக்க முயற்சித்தனரே தவிர வேறு ஒனறுமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

வட்டி அதிகம்:

சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி கூறியதாவது: பட்ஜெட்டில் எவ்வித திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. வருமானத்தை விட வட்டி அதிகம் செலுத்தும் நிலை உள்ளது. அரசால் செயல்பட முடியாது என நாங்கள் கருதுகிறோம், கடுமையான நிதிப்பற்றாக்குறை உள்ளது. விவசாயிகள் தொழிலாளர்களுக்கு ஒன்றுமில்லை. மாணவர்களுக்கு நன்மை கிடையாது. சட்டம் ஒழுங்கு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சட்ட மீறல்கள் நடக்கின்றன. அரசு நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கிறது. இதற்கு முடிவு கட்ட வேண்டியது மக்கள் தான். மக்கள் முதல் கட்டமாக ஆர்கே நகரில் நல்ல முடிவை தருவார்கள் என எதிர்பார்க்கிறோம். தமிழக அரசை மத்திய அரசு புறக்கணிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பலன்தராத பட்ஜெட்

தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறியதாவது: வேலைவாய்ப்பை பெருக்கும் திட்டமில்லை. குடிநீர் தேவையை சமாளிக்க தேவையான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு எதுவும் கிடையாது. தூய்மை இந்தியா திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதியை வைத்து தான் செய்கிறார்கள். ஒட்டு மொத்தமாக மக்களுக்கு பலன் தராத பட்ஜெட்டாக உள்ளது. பட்ஜெட்டிற்கு முன்னாள் வாட் வரி உயர்த்தியதால் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது. இதனால் காய்கறி , பழங்கள் விலை உயர்வு, பஸ்கட்டணம் மறைமுகமாக உயர்வு பால் விலை உயர்வு. இப்போது வரி இல்லாத பட்ஜெட் என சொல்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பற்றாக்குறை பட்ஜெட் துரதிருஷ்டவமமானது. மக்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் எதுவுமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Comments