தமிழ் தேசிய கூட்டமைப்பு:
என்னை வாழவைக்கும் தமிழ் மக்களுக்கு அன்பு வணக்கங்கள். லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், தன்னுடைய தாயார் ஞானாம்பிகை பெயரில் இலங்கையில் உள்ள வவுனியாவில் 150 வீடுகளை கட்டியுள்ளார். அவர் கட்டிய வீடுகள் ஏழைகளுக்கு வழங்குவதற்காக அந்த விழாவில் கலந்து கொள்ள என்னையும் அழைத்தார். ஏப்., 9ம் தேதி நடக்கும் அந்த விழாவில் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள். என்னுடன் இந்த நிகழ்ச்சியில் இலங்கையின் வடக்கு மாநில முதல்வர் விக்னேஸ்வரன், இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மலேசிய செனட் தலைவர் விக்னேஸ்வரன், பிரிட்டன் அனைத்துக் கட்சி தமிழ் பாராளுமன்ற குழுத் தலைவர் ஜேம்ஸ் பெர்ரி மற்றும் ஜஸ்டிஸ் கமிட்டி மெம்பர் கீத் வாஸ் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.
மறுநாள் ஏப்., 10ம் தேதி வவுனியா சென்று வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைத்து மரக்கன்றுகளை நடும் திட்டமும், அதன்பிறகு முல்லைத்தீவு கிளிநொச்சி, புதுகுடியிருப்பு போன்ற இடங்களை பார்வையிட்டு மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வெகுநாளான ஆசை:
காலம் காலமாய் வாழ்ந்த தங்களின் பூமிக்காக தங்களின் கவுரவத்திற்காக லட்சக்கணக்கில் ரத்தம் சிந்தி, மடிந்து தங்களை தாங்களே சுயசமாதியாக்கிக்கொண்டு பூமிக்குள் புதைந்து கிடக்கும் அந்த வீர மண்ணை வணங்கி, அந்த மாவீரர்கள் வாழ்ந்த, நடமாடிய இடங்களைப் பார்த்து அவர்கள் சுவாசித்த காற்றையும் சுவாசிக்க வேண்டும் என்ற ஆசை வெகுநாட்களாய் என்னுள் இருந்தது. தமிழ் மக்களை பார்க்கவேண்டும். மனம் திறந்து பேச வேண்டும் என்று ஆவலாய் இருந்தேன். இலங்கை அதிபர் சிறிசேனா அவர்களை, சந்தித்து மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்க எண்ணியிருந்தேன். இத்தருணத்தில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில அரசியல் கட்சியினர் பல அரசியல் காரணங்களை முன்வைத்து இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளக்கூடாது என்று அன்புடன் கேட்டு கொண்டுள்ளார்கள். அவர்கள் சொன்ன காரணங்களை முழு மனதாக ஏற்று கொள்ளாவிட்டாலும் அவர்களின் வேண்டுகோளுக்காக நான் இவ்விழாவில் கலந்து கொள்வதை தவிர்க்கிறேன்.
வேண்டுகோள்
அதேசமயம் நான் ஒன்றை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். நான் அரசியல்வாதி அல்ல, நான் ஒரு கலைஞன், திருமாவளன் சொன்னதை போன்று மக்களை மகிழ்விப்பது தான் என்னுடைய கடமை. இனி வரும் காலங்களில் இலங்கை சென்று அங்கே வாழும் தமிழ் மக்களை சந்தித்து, அவர்களை மகிழவைத்து, அந்த புனிதப்போர் நிகழ்ந்த பூமியை காணும் பாக்கியம் கிடைத்தால் தயவு செய்து அதை அரசியலாக்கி என்னை போகவிடாமல் செய்துவிடாதீர்கள் என்று அன்புடனும், உரிமையுடனும் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.
எச்.ராஜா கருத்து:
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா வெளியிட்டுள்ள டுவிட்டரில், போக வேண்டாம் என குரல் கொடுத்தவர்கள் எல்லாம் ராஜபக்சேவை சந்தித்து பரிசு பெற்று வந்தவர்கள் தான். இதனால் ரஜினி, இந்த கோரிக்கையை ஏற்று இருக்க கூடாது. இவ்வாறு கூறியுள்ளார்.
Comments