கட்சி பெயரையே காப்பாற்ற முடியாத அதிமுகவினர், தமிழகத்தை எப்படி காப்பாற்றுவார்கள் - துரைமுருகன் கேள்வி
இதனைத் தொடர்ந்து ஆர்.கே. நகரில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் நேற்று திமுக சார்பில் போட்டியிடும் மருது கணேஷை ஆதரித்து திமுக துணை பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், இந்தத் தொகுதி, தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா வெற்றி பெற்றும் எந்த வளர்ச்சியையும் அடையவில்லை என்று விமர்சனம் செய்தார். மேலும், கட்சியின் பெயரைக் கூட அதிமுகவினரால் காப்பாற்ற முடியவில்லை என்றும் இரட்டை இலை சின்னத்தை பாதுகாக்க முடியவில்லை என்றும் கூறிய துரைமுருகன் தமிழகத்தை எப்படி இவர்கள் காப்பாற்றுவார்கள் என்று கிண்டல் அடித்தார். அதிமுகவைச் சேர்ந்த ஒருவரால் அவர்களது கட்சியின் பெயரை உச்சரிக்கக் கூட முடியவில்லை என்று கூறிய துரைமுருகன் ஆர்.கே. நகர் தொகுதியில் திமுக அமோக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இன்னும் 6 மாதத்தில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாக ஏற்படும் என்றும் அதனைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் முதல்வராவது உறுதி என்றும் துரைமுருகன் கூறினார்.
Comments