இடைக்கால முதல்வராக பன்னீர்செல்வம் இருந்த போது, 'உச்ச நீதிமன்ற நீதிபதி மூலம், நீதி விசாரணை நடத்தப்படும்' என, அறிவித்தார். அதோடு சரி; எந்த தொடர் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது, சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் வரும் நிகழ்வுகள் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு, மத்திய அரசு உத்தரவிட முடியும். மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட விஷயத்தில், சி.பி.ஐ., விசாரணைக்கு, மத்திய அரசு நேரடியாக உத்தரவிட முடியாது.
ஒரு மாநிலத்துக்குள் நடந்த குற்ற வழக்கில், மாநில போலீஸ் சரிவர புலனாய்வு செய்யவில்லை என்றால், சி.பி.ஐ., விசாரணை கோரி, பாதிக்கப்பட்டவர்கள், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். வழக்கில் முகாந்திரம் இருந்தால், உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்.
உதாரணமாக, டி.எஸ்.பி.,விஷ்ணுபிரியா மரணம் தொடர்பாக, அவரது தந்தை தொடர்ந்த வழக்கால், சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல, ஒரே விதமான குற்றம், வெவ்வேறு மாநிலங்களில் நடந்திருந்தால், அது குறித்து விசாரிக்க, மாநில போலீசாருக்கு போதிய வசதி இல்லை என, கருதினால், அந்த வழக்கைசி.பி.ஐ.,க்கு மாற்ற, மாநில அரசே முன்வரலாம்.
வழக்கு தொடரவில்லை
உதாரணத்துக்கு போலி முத்திரைத்தாள் மோசடி, பல மாநிலங்களில் நடந்ததால், சி.பி.ஐ.,யிடம் அந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. கோவை குண்டு வெடிப்பு, ஆர்.எஸ்.எஸ்., அலுவலக குண்டு வெடிப்பு என, பல முக்கிய வழக்குகளும், சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டன.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக, அவரது நெருங் கிய உறவினர்கள் யாரும் வழக்கு தொடர வில்லை; முதல்வராக பதவி வகித்த பன்னீர் செல்வம், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகள் என யாரும், இதுவரை வழக்கு தொடரவில்லை. கட்சி தொண்டர் ஒருவர் தான், வழக்கு தொடுத்துள்ளார்.
எனவே, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றால், தமிழக அரசே முன்வர வேண்டும்; இல்லையென்றால், உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.இந்த இரண்டும் இல்லை யென்றால், சி.பி.ஐ., விசாரணைக்கு சாத்திய மில்லை என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.
இதுகுறித்து, கிரிமினல் வழக்கறிஞரும், பா.ஜ., சட்டப் பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினரு மான, ஆதி.குமரகுரு கூறியதாவது:
சி.பி.ஐ., விசாரணை கோரிய விஷயத்தில், மத்திய அரசு நேரடியாக தலையிட முடியாது. ஒன்று, சி.பி.ஐ., விசாரணை கேட்டு, மாநில அரசு கோரிக்கை வைக்க வேண்டும் அல்லது உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
வங்கிகளில் நடக்கும் நிதி மோசடியை விசாரிக்க, சி.பி.ஐ.,யில் தனிப்பிரிவு உள்ளது. மத்திய அரசு அலுவலகங்கள் தொடர்பான விஷயங்களில், சி.பி.ஐ., விசாரணை தேவை என கருதினால், மத்திய அரசு உத்தரவிடலாம்.
ஜெ., மரணம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரி, உயர் நீதிமன்றத்தை, முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் அணுகலாம்; 75 நாட்கள், ஜெ., மருத்துவமனையில் இருந்துள்ளார். அங்கு என்ன நடந்தது என்பது, பன்னீருக்கு தெரிந்திருக்கலாம். எனவே, வழக்கு தொடர, அவர் மிகவும் தகுதியானவர்.இவ்வாறு அவர் கூறினார்.
கடைசி ஆயுதம்!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பினர் கூறியதாவது:
இந்த விவகாரத்தில், மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்க, அனைத்து வழிகளையும் பின்பற்றுகிறோம். ஜனாதிபதியிடம் அளித்த மனு, உள்துறைக்கு அனுப்பப்பட்டு, மாநில அரசிடம் விளக்கம் கோர முடியும். மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கடைசி ஆயுதமாக, வழக்கு தொடர்வோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Comments