அதிமுக அலுவலகத்தையும் முடக்க முடியுமா?

சென்னை : அதிமுக கட்சியின் சின்னம் மற்றும் பெயரை முடக்கி தேர்தல் கமிஷன் நேற்று உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தையும் முடக்க ஓபிஎஸ் அணியினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கட்சி அலுவலகமும் முடங்குகிறது? :

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை சசிகலா தரப்பினர் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரி தேர்தல் கமிஷனிடம் மனு அளிக்க ஓ.பன்னீர்செல்வம் அணியினர் திட்டமிட்டுள்ளனர். கட்சியின் சின்னமும், பெயரும் யாருக்கு என முடிவு செய்யப்படாத நிலையில் கட்சியின் தலைமை அலுவலகத்தை சசிகலா தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என்ற கோரிக்கையை மனுவாக தயாரித்து தேர்தல் கமிஷனிடம் அளிக்க ஓபிஎஸ் அணியினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இரட்டை இலை சின்னம் யாருக்கும் இல்லை என்பதால் மாற்று சின்னத்தை முடிவு செய்து, இன்று காலை 10 மணியளவில் தலைமை தேர்தல் அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் இரு தரப்பினருக்கும் உத்தரவிட்டுள்ளது. மாற்றுச் சின்னம் தொடர்பான மனு அளிக்கும் போது, தலைமை அலுவலகத்தை சசிகலா தரப்பினர் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் ஓபிஎஸ் தரப்பினர் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், அலுவலகத்தை முடக்கும் விஷயத்தில் நாங்கள் தலையிட முடியாது. இது குறித்து நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என தெரிவித்தன. இந்த பரபரப்பால், இன்று(மார்ச் 23) காலை முதல் அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Comments