பணத்தைக் காட்டி வளைக்க முடியாது: தி.மு.க., வேட்பாளர் தடாலடி பேட்டி

தினமலர் செய்தி : ஆர்.கே.நகர் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிட களமிறங்கி இருக்கும் டி.டி.வி.தினகரனை, மக்கள் சக்தி மூலம் வீழ்த்திக் காட்டுவேன் என்று, தி.மு.க., வேட்பாளர் மருதுகணேஷ் கூறினார்.

அவர், தினமலர் இணையதளத்துக்கு அளித்த பேட்டி:

என்னுடைய குடும்பமே பாரம்பரியமான தி.மு.க., குடும்பம்தான். அம்மா பார்வதி நாராயணசாமி, ஏற்கனவே வார்டு 96ல் கவுன்சிலராக இருந்து பணியாற்றியவர். அதனால், மக்கள் பணி என்பது எங்கள் குடும்பப் பணி.

ஆர்.கே.நகரிலேயே பிறந்து வளர்ந்தவன் நான். இந்த தொகுதியின் சந்து, பொந்துகள் அனைத்துமே எனக்குத் தெரியும். தொகுதியில் என் கால்படாத இடம் இருக்காது. அனைத்துத் தரப்பு மக்களிடமும் பழகி இருக்கும், சாமாணியன். மக்கள் மனங்களை சம்பாதித்த அளவுக்கு பணம் சம்பாதிக்கவில்லை. இருந்தாலும், பணத்தைப் பற்றி கேட்காமல், என்னை, வேட்பாளர் ஆக்கிய கட்சியின் செயல் தலைவருக்கு, என் குடும்பமே கடமைபட்டிருக்கிறது.

பண முதலை டி.டி.வி.தினகரனை எதிர்த்து, பணமில்லாமல் உங்களால் எப்படி வெற்றி பெற முடியும் என்று கேட்கின்றனர். ஆட்சி - அதிகாரத்தில் இருக்கும் அவர்களில் அலங்கோல, செயல்படாத ஆட்சியின் அவலங்கள் மக்களுக்குத் தெரியும். மூன்று பிரிவாக நின்று அவர்கள் அடித்துக் கொள்ளும் காட்சிகளையெல்லாம் மக்கள் பார்த்து வெறுப்படைந்துள்ளார்கள். 

வாழ வழியில்லாமல், மக்கள் தவிக்கும் தவிப்பும், விலைவாசி உயர்வும், வேலையின்மையும், வறுமையும் ஆட்சிக்கு எதிராக பெரிய அளவில் வெறுப்பை உண்டாக்கி இருக்கிறது. எப்போது இல்லாத அளவுக்கு இந்தாண்டு தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. ரேஷனில் அரிசி இல்லை; பருப்பு இல்லை; பாமாயில் இல்லை; மொத்தத்தில் எதுவுமே இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. கேட்டால், எங்கே இல்லை? என்று அமைச்சர்களே திருப்பிக் கேட்கும் அவல நிலையில்தான், தமிழகம் உள்ளது.

இப்படியெல்லாம் மக்களின் அவல நிலைக்குக் காரணமானவர்களை தேர்தல் பிரசாரத்தில் அடையாளம் காட்டுவோம். மன்னின் மைந்தனான என்னை அறிந்து வைத்திருக்கும் ஆர்.கே.நகர் மக்களை, பணத்தைக் கொடுத்து யாரும் விலைக்கு வாங்க முடியாது. பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு, தேர்தல் களத்துக்கு வரும் தினகரனை, மக்களே வீழ்த்துவார்கள்.

ஊழல் செய்து சொத்துக்களை அளவுக்கு அதிகமாக குவித்துள்ள சசிகலா ஜெயிலுக்குள் இருந்து கொண்டு நடத்தும் பினாமி ஆட்சியின் அலங்கோல செயல்பாடுகள் அனைத்தும், மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படும் போது, தினகரன் என்ன… யார் வந்தாலும், வீழ்வது நிச்சயம். இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

Comments