மீண்டும் திமுக ஆட்சி : ஸ்டாலின் அழைப்பு

தினமலர் செய்தி : சென்னை : மீனவர்கள் கைது விவகாரம் மற்றும் திமுக.,வின் 50வது ஆண்டை முன்னிட்டு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது அறிக்கையில், இலங்கை சிறைகளில் வாடும் 85 மீனவர்களும், 128 படகுகளும் விடுவிக்கப்படாததால் அவர்களின் குடும்பங்கள் தாங்க முடியாத துயரத்தில் தத்தளிக்கின்றன. கடிதம் எழுதுவதோடு நின்றுவிடாமல் மீன்வளத்துறை அமைச்சரை உடனே டில்லிக்கு அனுப்பி தமிழக மீனவர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் தானே என மௌனம் சாதிக்காமல் இந்திய மீனவர்களே என்ற எண்ணத்தில் மத்திய அரசு செயல்பட்டு தாக்குதலையும் கைதுகளையும் தடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

'தமிழ்நாடு' என்று தாய்க்கு பெயர் சூட்டி மகிழ்ந்த தனயன் பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கிய திராவிட ஆட்சியின் 50வது ஆண்டு இது. மீண்டும் தி.மு.க அரசை அமைத்திட உறுதியேற்று, அண்ணா வழியில் அயராது உழைத்து ஆதிக்கமற்ற சமுதாயம் அமைக்க ஜனநாயக நெறியில் நமது பயணத்தைத் தொடர்வோம். அண்ணாவிற்கு பிறகு முதல்வராக பதவியேற்ற கருணாநிதி பல சாதனைகளை செய்துள்ளார். பல திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. திராவிட இயக்கம் அழிந்து விட்டதாக மனப்பால் குடிப்போர் முளைத்துக் கொண்டே தான் இருப்பார்கள். தமிழ்பயிரை விளைக்க திமுக.,வால் மட்டுமே முடியும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Comments