கடந்த இரண்டு நாட்களாக தன்னை சந்திக்க வந்த கட்சிக்காரர்களிடம், முழுக்க முழுக்க ஆர்.கே.நகர் தேர்தல் குறித்த விவரங்களையே கேட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
சிறைக்குச் சென்ற சில நாட்கள் வரை, சிறை வாழ்க்கை ரொம்பவும் கஷ்டமாக இருப்பதாக சசிகலா கூறி வந்தார். தற்போது, அந்த சங்கடத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருவதாக தெரிவித்து வருகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., அம்மா அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி நிறைய பேசுகிறார். கட்சிக்காரர்கள் யார் அவரை சந்திக்க வந்தாலும்,‛ நீங்கள் ஏன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை விட்டு விட்டு, இங்கு வந்து நேரத்தை வீணடிக்கிறீர்கள். உங்கள் ஒவ்வொருவரையும் நம்பித்தான், இடைத்தேர்தல் வெற்றி உள்ளது.
‛துரோகிகளை இந்தத் தேர்தலோடு நாம் மூட்டைகட்டி அனுப்பவில்லை என்றால், நாம் நிறைய சிரமங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும்‛ என்று சொல்லும் சசிகலா, ஆர்.கே.நகர் தொகுதியில் எப்படியெல்லாம் பணியாற்ற வேண்டும் என்று, நிறைய விஷயங்களை பட்டியல் போட்டுச் சொல்கிறார்.
சீறிய சசிகலா : கட்சியின் சின்னமாக, இரட்டை மின் விளக்கு கம்பத்தை கோரிப் பெற்றிருந்தால், ‛இரட்டை, இரட்டை' என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி, இரட்டை இலையை ஞாபகப்படுத்துவது போல, தீவிர பிரசாரம் செய்திருக்க முடியும். சிறைக்குள் இருந்து கொண்டு இதெல்லாவற்றையும் யோசிக்கும் என்னால், வெளியில் இருந்து இதையெல்லாம் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் அதிகமாகவே உள்ளது. பன்னீர்செல்வம் அணியினர், இரட்டை மின் விளக்கு கம்பம் சின்னத்தை பெற்று விட்டார்களே தவிர, நம் அளவுக்கு அவர்களால், தீவிர பிரசாரம் மேற்கொள்ள முடியாதது நமக்கான பலம்தான்.
மக்களை வளைக்கும் வித்தையை, தி.மு.க.,வும், பன்னீர்செல்வம் தரப்பும் செய்யாது என்பது நமக்கான பலம். அதற்காக, அதீத தெம்போடு இருந்து விட வேண்டாம். கட்சியின் முக்கியஸ்தர்கள் ஒவ்வொருவரும், இந்த வெற்றிதான் நம் எதிர்காலத்தின் அடையாளம் என்பதை மனதில் வைத்து செயல்படச் சொல்லுங்கள்.
குறைத்து எடைபோட வேண்டாம் : தி.மு.க., தரப்பில், கட்சியின் எல்லா மட்டங்களிலும் அதிருப்தி அதிகமாக இருப்பதாக தகவல் வந்துள்ளது. அங்கு வேட்பாளராக போடப்பட்டு இருப்வர் தொகுதி மக்கள் மத்தியில் வளைய வந்தவர் என்பதைத் தவிர, வலுவான வேட்பாளர் இல்லை என்கிறார்கள். அதுவும் நமக்கு பலம்தான். அதற்காக, அந்த விஷயத்தை எங்கும் வெளியில் யாரும் பேச வேண்டாம். இப்படித்தான், சுகவனம் என்ற சாதாரண நபர், பர்கூரில் ஜெயலலிதாவை வீழ்த்தினார். இத்தனைக்கும் அப்போது நம்மிடம் இரட்டை இலை சின்னம் இருந்தது. அதனால், என்னதான், இரட்டை இலை சின்னம் இருந்தாலும், நமக்கு மக்கள் ஆதரவு இல்லை என்றால், தோல்வியடையத்தான் செய்வோம். அதனால், சின்னம் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். ஒருவேளை, இரட்டை இலை சின்னம் எதிர்காலத்திலும் கிடைக்காமல் போனாலும் கவலைப்பட வேண்டாம். இருக்கும் சின்னத்தை, பிரபலப்படுத்தி விடலாம்.
உதாரணம் விஜயகாந்த் : உதாரணத்துக்குச் சொல்ல வேண்டும் என்றால், விஜயகாந்தின் தே.மு.தி.க.,வுக்கு, துவக்கத்தில் இருந்தே முரசு சின்னம்தான் அளிக்கப்பட்டது. அந்த சின்னத்தை வைத்து போட்டியிட்டு, அனைத்திலும் விஜயகாந்த் தோல்வியடைந்து வந்தார். 2011ல், அ.தி.மு.க.,வோடு கூட்டணி அமைத்து போட்டியிட்ட பின் தான், 29 இடங்களில் வெற்றி பெற்று, சட்டசபை எதிர்கட்சித் தலைவர் ஆனார். ஆக, யாரோடு எப்படி கூட்டணி அமைத்து வலுவாக தேர்தலை எதிர்கொள்கிறோம் என்பதுதான் முக்கியமே தவிர, சின்னம் முக்கியம் அல்ல. நம்மை விட்டுப் போன பின், அவரை தோல்வி துரத்துகிறது என்பதையெல்லாம் கூட, நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இடைத்தேர்தல் முடிந்து வெற்றி செய்தியோடு, நீங்கள் என்னை பார்க்க வந்தால் போதும்.
இவ்வாறு, சசிகலா கூறுவதாக, அவரை சந்தித்த கட்சிக்காரர்கள் கூறினர்.
Comments