"இலை" இருந்தா என்ன, இல்லாட்டி என்ன.. ஸ்டாலின் தில் பேச்சு.. வென்று காட்டுவார்களா தொண்டர்கள்?

தன்னம்பிக்கை சென்னை: இரட்டை இலை சின்னம் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி எங்களுக்கு கவலையில்லை, ஆர்.கே. நகர் மட்டும் அல்ல, உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது அவரது தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. அதேசமயம், அவரது வார்த்தை வெல்ல திமுகவினரின் தீவிரக் களப் பணியும் அவசியம் என்பதை கட்சியினர் உணர வேண்டும். 1967க்குப் பிறகு, தமிழக அரசியல் என்றால் அது, அதிமுக, திமுக ஆகிய திராவிட கட்சிகள்தான். ஒவ்வொரு தேர்தலிலும் இவைதான் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதிமுக ஆட்சி செய்தால் திமுக எதிர்க்கட்சியாக இருக்கும், திமுக ஆட்சி என்றால் அதிமுகதான் எதிர்க்கட்சி என்ற சூழல்தான் இருந்து வந்தது.

இப்போது அரசியல் சூழல் மாற ஆரம்பித்துள்ளது. எனவே எதிரிகளும், போட்டியாளர்களும் கூட மாற ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில்தான் ஸ்டாலின் பேச்சு கவனிப்புக்குரியதாகியுள்ளது.

28 ஆண்டுகளுக்கு பிறகு கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலை இல்லாத ஒரு தேர்தலை தமிழகம் சந்திக்கிறது. எம்ஜிஆர் மறைந்த பின்னர், 1989-ஆம் ஆண்டு அதிமுக ஜெ.அணி, ஜா.அணி என இரண்டாக பிளவுப்பட்டு அப்போது நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. இரட்டை இலை முடக்கப்பட்டது. ஜெ. அணி சேவலிலும், ஜா அணி இரட்டைப் புறாவிலும் மோதின.

வரலாறு திரும்புகிறது இரட்டை இலை இல்லாத நிலையில் உதயசூரியன் பிரகாசித்தது. ஆட்சியைப் பிடித்தது. அதிமுக அத்தேர்தலில் வீ்ழ்த்தப்பட்டது. அதே வரலாறு ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் திரும்பியுள்ளது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்று அதிமுக பிளவுபட்டு நிற்கிறது. ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

சின்ன டெஸ்ட்தான்.. ஆனால் முக்கியம்! 1989 போல இது பொதுத் தேர்தல் அல்ல. ஒரு தொகுதியின் இடைத் தேர்தல்தான். ஆனால் இந்த தேர்தலை அபாரமாக வென்றெடுக்க வேண்டிய மிகப் பெரிய கட்டாயத்தில் திமுக உள்ளது. காரணம், ஜெயலலிதா இல்லை, அதிமுக ஒன்றுபட்டு இல்லை, இரட்டை இலையும் இல்லை. எனவே மிகப் பெரிய வெற்றியை திமுக பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே அனைவரிடமும் உள்ளது.

தன்னம்பிக்கை இந்த நிலையில்தான், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டாலும் சரி, இருந்தாலும் சரி நாங்கள் வெற்றி பெறுவோம் என்று மு.க.ஸ்டாலின் நம்பிக்கையுடன் கூறியுள்ளார். மேலும் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து திமுக போட்டியிட்டபோதும் அக்கட்சி டெபாசிட் இழக்கும் அளவுக்கு நாங்கள் தோற்கடித்துள்ளோம் என்றும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

தொண்டர்களுக்கும் தேவை மு.க. ஸ்டாலினிடம் இருக்கும் இதே தன்னம்பிக்கை திமுக தொண்டர்களுக்கும் முக்கியமாக தேவை. அவர்கள் இதை சாதாரணாக எடுத்துக் கொள்ளாமல் முழுவீச்சில் களப்பணியாற்றினால் மட்டுமே திமுகவுக்கு வெற்றி சாத்தியம். மாறாக எதிர்மாறாக நடந்து விட்டால் அது இத்தொகுதியுடன் முடிந்து விடாது, பல தளங்களில் அது எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments