ஆர்.கே.நகர் திமுக வேட்பாளர் மருதுக்கு ‛சீட்' கிடைத்தது எப்படி?

தினமலர் செய்தி : சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளராக, பகுதி செயலர் மருதுகணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், எப்படி வேட்பாளர் ஆக்கப்பட்டார் என்பதற்கான காரணங்களை, தி.மு.க.,வினர் பட்டியல் இட்டு கூறினர்.

அந்த பட்டியல் விவரம்:

*அ.தி.மு.க.,வை ஜெயலலிதா வழிநடத்தியது போல வழி நடத்த, தி.மு.க.,வின் செயல் தலைவர் விருப்பப்படுகிறார். சாதாரண கட்சித் தொண்டனுக்கும் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பளித்தது போல, இந்த முறை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், கட்சியின் தீவிர தொண்டர் ஒருவருக்கு வாய்ப்பளிக்க விரும்பினார்.

*மருது கணேஷ், கட்சி நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் போராட்டங்களில் பங்கேற்றவர். இவரது குடும்பமே, பாரம்பரியமாக தி.மு.க.,வில்தான் உள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக, குடும்பத்தினர் தி.மு.க.,வில் இருந்து வருகின்றனர். கடைசியாக, மார்ச் 13ல் நடந்த, ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் இல்லாததை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் உள்ளிட்ட எல்லா போராட்டங்களிலும் கலந்து கொண்டவர்.

*கடந்த 2015ல் நடந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடவும் விருப்பப்பட்டார் மருது கணேஷ். அதேபோல, 2016ல் நடந்த சட்டசபை பொதுத் தேர்தலிலும் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட 'சீட்' கேட்டார். அந்த சமயத்தில், நடந்த நேர்காணலில் கலந்து கொண்டு, தன்னை பத்திரிகையாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டதும், இந்த முறை இல்லாவிட்டாலும், விரைவில் உனக்கு நல்ல வாய்ப்பை கிடைக்கும் என்று, கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறினாராம். அதையடுத்தே, அவர் இந்த முறை வேட்பாளர் ஆக்கப்பட்டிருக்கிறார்.

*வட்டச் செயலராக இருந்து, பகுதிச் செயலர் வரை உயர்ந்திருக்கும் அவர், சென்னை ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் வழக்கறிஞராக பணிபுரிந்து, கட்சியினருக்கு, குறிப்பாக, ஆர்.கே.நகர் பகுதியில் இருப்பவர்களுக்கு, சட்ட ரீதியில் நிறைய உதவிகள் செய்திருக்கிறார்.

*மருது கணேஷ், தொகுதியில் செலவழிக்க என்னிடம் பணம் கிடையாது; கட்சிதான் செலவழிக்க வேண்டும் என்று, நேர்காணலின் போது, ஓபனாக சொன்னது, நேர்காணல் நடத்தியவர்களுக்குப் பிடித்து போனதாம். பலர் பணம் இல்லாமலேயே சீட் வாங்க பொய் கூறுவராம்.

*மாவட்டச் செயலர் சுதர்சனம், மருது கணேசுக்கு சீட் கிடைத்தால், அவரை எம்.எல்.ஏ.,வாக ஆக்கிக் காட்டுவேன் என்று, ஸ்டாலினிடம் உறுதி அளித்திருக்கிறாராம். இடைத்தேர்தல் செலவுகளை ஏற்கவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதி அளித்திருக்கிறார்.

இவ்வாறு பட்டியலில் உள்ள விவரங்களை, தி.மு.க.,வினர் கூறினர்.

Comments