சசிகலாவின் நியமனங்கள் செல்லாது : ஓபிஎஸ்

தினமலர் செய்தி : புதுடில்லி : டில்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கட்சி விதிகளின்படி சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படாததால், அவரது நியமனங்கள் எதுவும் செல்லாது என தெரிவித்துள்ளார்.
நியமனங்கள் செல்லாது :

ஓபிஎஸ் தனது பேட்டியில், கட்சி விதிகளின்படி சசிகலா தேர்வு செய்யப்படாததால் அவரது நியமனங்கள், நடவடிக்கைகள் எதுவும் செல்லாது. கட்சி விதியின்படி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர், மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டால் 5 ஆண்டுகள் ஆன பிறகே அவர் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட முடியும். சசிகலா கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டு இன்னும் 5 ஆண்டுகள் நிறைவடையவில்லை.

இரட்டை இலை எங்களுக்கே :

அதிமுக.,வின் சட்ட விதிகளுக்கு எதிராக கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார் என தேர்தல் கமிஷனிடம் முறையிட்டுள்ளோம். இதே போன்று பெரா வழக்கில் அபராதம் விதிக்கப்பட்ட தினகரனின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் எனவும், பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளதாக கட்சி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை, அடுத்த இடத்தில் இருக்கும் அவைத் தலைவர் மதுசூதனுக்கே வழங்க வேண்டும் எனவும் கேட்டுள்ளோம். இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளோம்.

தற்காலிக பொதுச் செயலாளர் என்ற பதவியே கட்சியின் சட்டவிதிகளில் இல்லை. பொதுச் செயலாளராக பதவி காலியானால், கட்சி பொறுப்புக்களை தலைமை நிர்வாகிகளே கவனிக்க வேண்டும் என்ற சட்டசவிதிகளும் தேர்தல் கமிஷனிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. நல்ல பதில் கிடைக்கும் என நம்புகிறோம். ஓரிரு நாளில் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments