ஓ.பி.எஸ்., அணி புகார்
சசிகலா நியமனத்தை செல்லாது என அறிவிக்க கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், ‛அ.தி.மு.க., சட்ட விதிகளின் படி, சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது. சசிகலாவுக்கு கட்சியிலிருந்து உறுப்பினர்களை நீக்கவோ, புதிதாக நியமிக்கவோ எவ்வித அதிகாரமும் கிடையாது. சசிகலாவின் நியமனம் மற்றும் அவரின் அனைத்து நடவடிக்கையும் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்' குறிப்பிடப்பட்டிருந்தது.
சசிக்கு ‛நோட்டீஸ்'
இந்த புகார் மனுவை ஏற்ற தேர்தல் ஆணையம் பொதுச்செயலர் நியமனம் குறித்து பிப்.,28 ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க சசிகலாவுக்கு ‛நோட்டீஸ்' அனுப்பியது. சசிகலா சிறையில் இருப்பதால் சிறை முகவரிக்கு ‛நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.
முன்னதாக, சசிகலா அ.தி.மு.க.,வின் துணை பொதுச்செயலாளராக தினகரனை நியமித்தார். ஆனால், தினகரன் நியமனம் குறித்து அ.தி.மு.,க சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலும் அனுப்பப்படவில்லை.
தினகரன் கடிதம் ஏற்க மறுப்பு
இந்நிலையில், சசிகலாவின் நோட்டீசுக்கு தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு விளக்க கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து விட்டது. இதுகுறித்து, தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தில், ‛தேர்தல் ஆணைய ஆவணங்களின் படி, தினகரன் அ.தி.மு.க.,வில் எவ்வித பொறுப்பில் இல்லை. சசிகலா சார்பாக அவர் கடிதம் அனுப்பியது ஏற்க முடியாது. தேர்தல் ஆணைய நோட்டீசுக்கு மார்ச் -10 ம் தேதிக்குள் சசிகலா விளக்கம் அளிக்க வேண்டும். சசிகலாவின் கையெழுத்துடன் கூடிய கடிதத்தை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும்' என தெரிவித்துள்ளது.
Comments