புதிய நோட்டுகள் அச்சடிக்க எவ்வளவு செலவாகிறது?

தினமலர் செய்தி : புதுடில்லி: 'புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள, ஒரு, 500 ரூபாய் நோட்டை அச்சடிக்க, 2.87 முதல், 3.09 ரூபாயும்; ஒரு, 2,000 ரூபாய் நோட்டை அச்சடிக்க, 3.54 முதல், 3.77 ரூபாயும் செலவாகிறது' என, பார்லிமென்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கேள்விக்கு, மத்திய நிதித் துறை இணையமைச்சர், அர்ஜுன் ராம் மேஹ்வால், ராஜ்யசபாவில் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள, ஒரு, 500 ரூபாய் நோட்டை அச்சடிக்க, 2.87 முதல், 3.09 ரூபாயும்; ஒரு, 2,000 ரூபாய் நோட்டை அச்சடிக்க, 3.54 முதல், 3.77 ரூபாயும் செலவாகிறது.

தொடர்ந்து, இந்த நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருவதால், மொத்தம் எவ்வளவு அச்சடிக்கப்பட்டுள்ளன என்ற விபரங்களை தற்போது தர இயலாது. புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கான காகிதங்கள், ஏற்கனவே அரசுக்கு, 'சப்ளை' செய்யும் நிறுவனங்களிடம் இருந்தே வாங்கப்படுகின்றன. இந்த காகிதங்களை வேறு யாருக்கும் தரக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு, பிப்., 24 நிலவரப்படி, நாட்டில், 11.64 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, 2016, டிச., 10 நிலவரப்படி, 12.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய, செல்லாததாக அறிவிக்கப்பட்ட, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகள் அரசுக்கு திரும்ப வந்துள்ளன. 

இதில், உண்மையான ரூபாய் நோட்டுகள் எவ்வளவு என்பது உள்ளிட்ட கணக்குகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

Comments