கடும் நிதி நெருக்கடியில் தள்ளாடும் தமிழக அரசு!

தினமலர் செய்தி : தமிழக அரசின் வருவாய், பல வகைகளில் குறைந்துள்ளதால், கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிதி நெருக்கடியை சமாளித்து, வரி இல்லாத பட்ஜெட்டை உருவாக்குவதும், அரசுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
தமிழக அரசின் கடன், ஆண்டுதோறும் அதிகரித்தபடி உள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், இலவச திட்டங்களுக்கு பணத்தை வாரி வழங்கியதால், வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இலவச திட்டங்களின் பயனாக, அ.தி.மு.க., மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததும், தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற, புதிதாக பல இலவச திட்டங்களை, முதல்வராக இருந்த ஜெ., அறிவித்தார்.

அனைத்து வீடுகளுக்கும், 100 யூனிட் இலவச மின்சாரம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் அதிகரிப்பு, விவசாயிகள் கடன் தள்ளுபடி போன்றவற்றால் அரசின் செலவு அதிகரித்தது. அதேநேரம், 500 மதுபான கடைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டன; இதனால், வருவாய் குறைந்தது.

ஜெ., மறைவுக்கு பின், அரசு நிலையற்றதாக உள்ளது. புதிய முதல்வராக பழனிசாமி பொறுப் பேற்றுள்ளார். அவர், சசிகலா குடும்பத்தினர் மீது மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியை போக்க, உழைக்கும் மகளிருக்கு, 50 சதவீத மானியத் தில், ஸ்கூட்டர் வழங்கும் திட்டம், மகப்பேறு நிதியுதவி உயர்வு, வேலைவாய்ப்பற்ற இளைஞர் உதவித்தொகை உயர்வு என, பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தன் பங்கிற்கு, 500 மதுபான கடைகளின் எண்ணிக் கையை குறைத்தார். புதிய இலவச திட்டங்களால் செலவு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், வருமானம் குறைந்துள்ளது. இதனால், அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. போதிய நிதி இல்லாததால், முதியோர் உதவித் தொகை, பல மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளது.

அதேபோல, உள்ளாட்சி அமைப்புகளிலும் கடும் நிதி நெருக்கடி நிலவுகிறது. பல நகராட்சிகளில், அடுத்த மாதம், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக் கவே சிரமப்படும் நிலை உள்ளது. முன்னர், விடு முறை நாட்களை, 'சரண்டர்' செய்தால், அதற்குரிய சம்பளம், 15 நாட்களுக்குள் வந்து விடும். தற்போது, இரண்டு மாதங்களாகியும் பணம் வராமல் உள்ளது என, அரசு ஊழியர்கள் புலம்புகின்றனர்.

கடந்த ஆண்டே, தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ளதா என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.நிதி நெருக்கடி குறித்து, நிதித்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்னரே, அரசுக்கு நிதி நெருக்கடி துவங்கியது. சட்டசபை தேர்தலுக்கு பின், நிலையான அரசு அமைய வில்லை. இது, தமிழகத்தின் வளர்ச்சியை பாதித்துள்ளது.பத்திரப் பதிவுக்கு தடை விதிக்கப் பட்டதால், அதன் மூலம் கிடைக்கும் வருமானம் பெரிதளவு குறைந்துள்ளது. மதுபான கடைகள், 1,000 மூடப்பட்டதால் அந்த வருமானமும் குறைந்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரிக்கான, ஜி.எஸ்.டி., திட்டத்தை அமல்படுத்தியதால், தமிழகத்திற்கு லாபம்ஏற்படவில்லை. அதே நேரம், வரி வருவாய் பெருமளவு குறைந்துள்ளது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பும் வளர்ச்சியை பாதித்துள்ளது. 

வருமானம் பெருமளவு குறைந்துள்ள நிலையில், செலவு அதிகரித்தபடி உள்ளது. நடப்பு நிதியாண்டில், 40 ஆயிரத்து, 533 கோடி ரூபாய், நிதி பற்றாக்குறை இருக்கும் என, 2016 - 17ம் ஆண்டுக் கான பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டிருந்தது; அது, தற்போது அதிகரித்துள்ளது.

'வர்தா' புயல் பாதிப்பு, வறட்சி பாதிப்பு போன்றவையும், நிதி நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளன. வறட்சி நிவாரணத்தை, அரசு அறிவித்துள்ளது. ஆனால், மத்திய அரசு இன்னமும் நிதி ஒதுக்காமல் உள்ளது.

பிரதமரை சந்தித்த முதல்வர், வர்தா புயல் நிவாரணம், வறட்சி நிவாரணம், மத்திய அரசு தர வேண்டிய நிலுவைத் தொகை என, 70 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கும்படி கோரியுள்ளார். அந்த நிதி வந்தால், ஓரளவு நிதி நிலைமையை சமாளிக்க முடியும்.

இல்லையெனில், தமிழக அரசின் நிதி நிலைமை சீராக, பல ஆண்டுகள் ஆகலாம். சில ஆண்டுகளாக, வரி இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதே நிலை தொடருமானால் சிக்கல் அதிகரிக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஓய்வு வயதை 60 ஆக்க திட்டம்?

தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், அடுத்து வரும் ஆண்டுகளில், பெரும்பாலான அரசு ஊழியர்கள், ஓய்வு பெற உள்ளனர். அவர்களுக்கு ஓய்வூதிய பணப் பலன்களை வழங்க, போதிய நிதி இல்லாத நிலைமை உள்ளது. இதை தவிர்க்க, ஓய்வு பெறுவோரின் வயதை, 60 ஆக மாற்றலாமா என, அரசு ஆலோசித்து வருகிறது. அவ்வாறு ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப் பட்டால், இளைஞர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறி யாகும்.

Comments