அதிமுக பொதுச் செயலாளர் பதவி விவகாரம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் கிடுக்கிப்பிடியால் சசிகலா தரப்பு பெரும் குழப்பத்தில் உள்ளது. சசிகலாவை அப்பொறுப்பில் நியமித்தது செல்லுமா செல்லாதா என்ற விவகாரம் ஒருபுறம் இருக்க மறுபக்கம் டிடிவி தினகரன் நியமனத்தால் மேலும் சிக்கலாகியுள்ளதாக சொல்கிறார்கள்.
அள்ளித் தெளித்த அவசர கோலமாக சசிகலா குரூப் எடுத்த ஒவ்வொரு முடிவும் அவர்களுக்கே எதிராக மாறி வருவதாக சொல்கிறது டெல்லி வட்டாரத் தகவல்கள்.
தேர்தல் ஆணையத்தின் கிடுக்கிப்பிடி
அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் சசிகலா நியமிக்கப்பட்டது தொடர்பாக ஓ.பி.எஸ். தரப்பு தேர்தல் ஆணையத்திடம் வலுவான புகாரை அளித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் சசிகலாவிடம் விளக்கம் கேட்டிருந்தது.
யாரிடம் கேட்டால்.. யார் பதிலளிப்பது
இதற்கு சசிகலா தரப்பில் வழக்கறிஞர்கள் மூலமாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்தான் சிக்கலாகியுள்ளதாம். அதாவது தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது சசிகலாவிடம். ஆனால் டிடிவி தினகரன் பெயரில் விளக்கம் போயுள்ளதாக சொல்கிறார்கள். சசிகலா நியமனம் நடந்த சமயத்தில் தினகரன் கட்சியில் எந்த பொறுப்பிலுமே இல்லை. ஏன் கட்சியிலேயே இல்லை. எனவே அவரது பெயரில் எப்படி விளக்கம் தர முடியும் என தேர்தல் ஆணையம் கடுப்பாகியுள்ளதாம்.
டென்ஷனில் தினகரன்
மறுபக்கம் தினகரன் வேறு மாதிரியான டென்ஷனில் உள்ளாராம். பிப்ரவரி 27 ம் தேதி அதிமுக தலைமையகத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் தினகரன். ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வமும் சில மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், தினகரனும் நடத்தியதால் அரசியலில் பரபரப்பு உருவாகியிருந்தது.
வெறும் 2 மாவட்டம் மட்டுமே
ஆனால் தினகரன் நடத்திய ஆலோசனைக்கு ஈரோடு, நெல்லை ஆகிய இரண்டு மாவட்ட செயலாளர்கள் மற்றும் அந்த மாவட்டத்தின் நிர்வாகிகள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடத்தில் பேசிய தினகரன், பொதுவாக, மா.செ.க்கள் அனுகுமுறைகளால்தான் கட்சியினர் நம்மைவிட்டு வெளியே மாற்று அணிக்கு போகிறார்கள். உங்கள் அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ளுங்கள். பன்னீர் அணிக்கு சென்ற தொண்டர்களை நம் பக்கம் கொண்டு வர முயற்ஸி எடுங்கள் என கறாராக சொல்லியிருக்கிறார்.
தேர்தல் ஆணைய விவகாரம் முடியும் வரை
இதேபோன்று அடுத்தடுத்த கூட்டங்களும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம், சசிகலாவுக்கு எதிரான தேர்தல் ஆனைய நோட்டீஸ் விவகாரத்தில் டென்சனாக இருப்பதால் மா.செ.க்கள் கூட்டத்தை சற்று தள்ளிவைத்துள்ளாராம் தினகரன். இந்த விவகாரம் தீர்ந்த பிறகே அவர் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்வாராம்.
Comments