ஆர்.கே., நகர் இடைத்தேர்தல்: தினகரன் மனு ஏற்பு

சென்னை: ஆர்.கே., நகர் இடைத்தேர்தலில் தினகரன் மனு ஏற்கப்பட்டது. இதனால் இந்த இடைத்தேர்தலில் அதிமுக அம்மா, அதிமுக புரட்சிதலைவி அம்மா , திமுக, பா.ஜ., என்ற 4 முனை போட்டி உருவாகி இருக்கிறது.

இன்று வேட்பு மனு பரிசீலனை விறு,விறுப்பாக நடந்தது. அன்னிய செலாவணி வழக்கு இருப்பதால் அதிமுக அம்மா அணியை சேர்ந்த தினகரன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தேர்தல் கமிஷனிடம் ஜோசப் என்பவர் ஏற்கனவே மனு செய்தார். இது போல் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தரப்பில் ஒரு மனு தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீண் நாயாரிடம் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 60 பக்கம் கொண்ட புகார் மனுவும் வழங்கப்பட்டது. மேலும் தினகரன் மனுவை ஏற்க கூடாது என்று வக்கீல்களும் ஆஜராகி வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து, தினகரன் மீதான வேட்பு மனு மீதான பரிசீலனை முடியாமல் தேக்கம் ஏற்பட்டது. இதனை தேர்தல் அதிகாரிகள் ஏற்கவில்லை. தினகரன் மனு ஏற்று கொள்ளப்பட்டதாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது.

மதுசூதனன் மனு ஏற்பு:

முன்னதாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் மதுசூதனன் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. தே.மு.தி.க., வேட்பாளர் மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர், பா.ஜ., வேட்பாளர் கங்கை அமரன் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

சமத்துவ கட்சி வேட்பாளர் அந்தோணி சேவியர் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.அவரது மாற்று வேட்பாளர் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

Comments