ரூ.3 கோடி, 3 கிலோ தங்கம் கொடுத்து MLA-க்கள் வாங்கப்பட்டது அம்பலம்

தினமலர் செய்தி : 'கூவத்துார் புகழ்' எம்.எல்.ஏ.,க்களுக்கு, தலா, மூன்று கோடி ரூபாய் பணம், மூன்று கிலோ தங்கம் கொடுத்ததை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று அம்பலப்படுத்தினார். 

பதவிக்காக மந்திரிகள் நடத்திய நாடகம் பற்றிய பரபரப்பு தகவல்களையும், அவர் வெளியிட்டார். அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன் போன்றோர் சொல்வதெல்லாம் பொய் என்றும், ஆவேச புகார் கூறினார்.

பன்னீர்செல்வம் வீட்டில், நேற்று நாமக்கல், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில், அவர் பேசியதாவது:

ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள, தலா, மூன்று கிலோ தங்கம், மூன்று கோடி ரூபாய் ரொக்கம் கொடுத்துள்ளனர். அதை வேண்டாம் எனக் கூறிவிட்டு, எம்.எல்.ஏ., செம்மலை வெளியில் வந்து விட்டார். நேராக தொகுதிக்கு சென்று, மக்களிடம் கருத்து கேட்டார். அவர்கள், நம் பக்கம் இருப்பதை அறிந்ததும், நம்மிடம் வந்து சேர்ந்தார். அவர், மக்கள் கருத்தை கேட்டு முடிவு எடுப்பதால் தான், 1980ல் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அண்டப்புளுகு

பதவிக்காக, அமைச்சர்கள் பொய் கூறுகின்றனர். தனக்கு அமைச்சர் பதவி தரவில்லை என்ற கோபத்தில், செங்கோட்டையன், அப்பல்லோ மருத்துவமனைக்கு, 15 நாட்களாக வராமல் இருந்தார். அவர் தற்போது, ஜெ., இரட்டை விரலைகாண்பித்ததாகக் கூறுகிறார்.

அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு என, கேள்விப் பட்டுள்ளேன். அதை, இன்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறி வருகிறார். 'மூன்று சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்றதும், ஜெ., மூன்று வகையான இனிப்பு சாப்பிட்டார்' என, பொதுக்கூட்டத்தில் கூறி உள்ளார். 

'என் இரண்டு குழந்தைகள் மீது சத்தியம்; இது உண்மை' என்றும் தெரிவித்துள்ளார்; அவருக்கு, எட்டு குழந்தைகள்.அமைச்சர் விஜயபாஸ்கர், மிகவும் வில்லங்கமான ஆளு. அவர் செய்யாத தொழிலே இல்லை; 'ஆல் ரவுண்டர்' அவர். அமைச்சர் தங்கமணி, என் அறைக்கு வந்து, 'சசிகலா முதல்வரானால், தொகுதி பக்கம் யாரும் செல்ல முடியாது. தேர்தலில் ஒரு இடம் கூட பெற முடியாது' என, மேஜையில் ஜீரோ போட்டு காண்பித்தார். 'இதை தவிர்க்க, விரைவாக நல்ல முடிவு எடுங்கள்' என்றார்.

நான் நல்ல முடிவு எடுத்து விட்டேன். ஆனால், அவர் தவறான முடிவு எடுத்து அங்குள்ளார். அவர் தொகுதிக்கு வரும் போது, நல்ல முடிவு எடுக்க சொல்லுங்கள். சசிகலா குடும்பத்திற்கு ஆதரவு தெரிவித்த, 122 எம்.எல்.ஏ.,க்களும், தொகுதி பக்கம் செல்ல முடியவில்லை.விரட்டி அடித்தனர்ஒவ்வொருவரும், 20 அல்லது, 30 போலீசார் பாதுகாப்புடன், தொகுதிக்கு செல்கின்றனர். கருணாஸ் தொகுதிக்கு சென்ற போது, அவரை விரட்டி அடித்துள்ளனர். போலீஸ் பாதுகாப்புடன் சென்றும், ஒரு மணி நேரம் கூட இருக்க முடியவில்லை.

எம்.எல்.ஏ., தமீமுன் அன்சாரி, மக்களிடம் கருத்து கேட்க போவதாகக் கூறி, ஓட்டு பெட்டி வைத்தார். சசிகலாவுக்கு ஆதரவாக ஓட்டு போட, அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அங்கு, 500 பேரை அனுப்பினார். அவர்கள் வருவதற்கு முன், 1,000 பேர், நமக்கு ஆதரவாக ஓட்டு போட்டு விட்டனர். இருந்தும், மக்கள் முடிவை ஏற்காமல், அன்சாரி அந்தப் பக்கம் போய் விட்டார்.

சசிகலா பக்கம், 122 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே இருக்கின்றனர். நம் பக்கம், 7.50 கோடி தமிழ் மக்கள் உள்ளனர்.இவ்வாறு பன்னீர்செல்வம் பேசினார்.

Comments