ரூ 28 கோடி அபராத தண்டனைப் பெற்ற தினகரனால் தேர்தலில் நிற்க முடியுமா?

Is TTV Dinakaran qualified to contest in election?OneIndia News : நாடே ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் சென்னை ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் டிடிவி தினகரன். பெங்களூர் சிறையில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி தினகரன் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் காஃபிபோசா ( COFEPOSA ) சட்டத்தின் கீழ் ஓராண்டு காலம் தடுப்புக் காவல் சிறை மற்றும் ரூ 28 கோடி அபராதம் விதிக்கப்பட்டவர்.

இந்தக் கைது நடந்தது 1995 ம் ஆண்டு. அதாவது ஜெயலலிதாவின் முதல் ஆட்சி நடந்து கொண்டிருந்த போது. தன்னை COFEPOSA சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று கூறி அமலாக்கப் பிரிவின் மேல் முறையீட்டு வாரியத்தில தினகரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மே 5ம் தேதி 2,000 ம்ஆண்டில் தள்ளுபடி செய்தது. மேலும் அந்நிய செலாவணி மோசடிக்காக தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப் பட்டது. இதனை எதிர்த்து தினகரன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவைத் தான் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும் 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றமே தினகரனுக்கு எதிரான இந்தத் தீர்ப்பு நியாயமானதுதான் என்று கூறிவிட்டது. இந்நேரம் இந்த ரூ 28 கோடி அபராதத்துக்காக தினகரனின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்னும் நடக்கவில்லை. ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் சிறைத் தண்டனைப் பெற்றவர், அந்தத் தண்டனை சரிதான் என உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டவர், ரூ 28 கோடி அபாரதம் விதிக்கப்பட்டவர் தினகரன். இவர் தேர்தலில் போட்டியிட முடியுமா... அது செல்லுமா? இந்தக் கேள்வியைத்தான் இப்போது முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் கேட்டுள்ளார். இனி நீதி மன்றங்களின் கதவுகளை தினகரனுக்கு எதிரான புதிய மனுக்கள் தட்டக் கூடும்.

Comments